வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி வவுனியா மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தகவல்


வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க 10 இடைத்தங்கல் நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இடர் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜானக ஜயவர்த்தன தெரிவித்தார். 
 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் ஏதாவது செய்துள்ளீர்களா? எனக் கேட்டபோது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் :
அலகல்ல, கள்குண்ணாமடுவ, பம்பைமடு, சமணங்குளம், தாண்டிக்குளம், சூடுவெந்தபுலவு, பாவற்குளம்,  மருதவோடை, ஊஞ்சல்கட்டி ஆகிய இடங்களில் இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இங்கு மலசலகூட வசதி, சமையல்வசதி, சூரிய மின் கல வசதி உட்படப் பல்வேறு வசதிகளையும் யு.என்.டி.பி. நிறுவன உதவியுடன் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
வவுனியா மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவுவதுடன் வீடுகள் மோசமாகப் பாதிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக தாம் தற்காலிக வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கும், 100 க்கு மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இணைத்துத் துரிதமாக இடர்முகாமைத்துவக் கிராமங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.