வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனம்
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நிலவும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக வவுனியா பிரதேச சபை பிரிவு மற்றும் செட்டிக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த 3,877 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், இம்மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கான உணவுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில், 35 குளக்கட்டுகள் உடைப்புக்குள்ளாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒளசதபிட்டிய முதல் செட்டிக்குளம் வரையான பிரதான வீதியில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் மூடப்பட்டிருந்த ஏ – 9 வீதி இன்று வழமைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.