வடக்குக்கு 8 விசேட குழுக்கள் அனுப்பி வைப்பு


வட மாகாணத்தில் மோசமான காலநிலை, வெள்ளப்பெருக்கினால் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ள மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்க ளுக்கும் மேலதிகமாக எட்டு விஷேட குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டோ மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்கள் ஐவர் அடங்கிய எட்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய மன்னார் மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், வவுனியா மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தன்னுடன் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஆளுநர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முதற் கட்டமாக 2 வாரங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை அமைச்சு வழங்கியுள்ளதுடன், சிறுவர்களுக்கு தேவையான பால்மா, பாய் மற்றும் மருத்துவ பொருட்களை மாகாண சபையின் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள அதே சமயம், தான் இன்று கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஆளுநர் ஜி. எ. சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
அரசாங்க அதிபர்கள், சகல உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை அழைத்து பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களுக்கும் தேவையான முழு¨யான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்பொழுது மழை பெய்து குறைந்துள்ள நிலையில், குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருவதுடன், குளங்களில் சில வான்கதவுகள் மூடப்பட்டு வருவதுடன், எஞ்சியுள்ள வான் கதவுகளை எதிர்வரும் ஓர் இரு தினங்களில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித தங்குதடைகள் இன்றி உடனடியாக நிவாரணங்களை உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரி களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.