இலங்கையின் வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்: ஐ.நா அலுவலகம்


இலங்கையின் வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமரும் போது எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீள்குடியமரும் மக்கள், காணி, வீடு மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். போருக்கு பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மீளத்திரும்பிய பலருக்கு காணி தொடர்பான ஆவணங்கள் இல்லை. எனவே அவர்களால் தமது காணிகளை வீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்கள், தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நட்ட ஈடுகளை பெற்றுக்கொள்வதில், வீடுகளை திருத்தியமைத்தலில் அவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதனையடுத்து, குறித்த பிரச்சினையை தீர்க்கும் முகமாக ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் உள்ள சுமார் 45 அரச பணியாளர்களுக்கு கணணிகள், பிரதி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த அரச பணியாளர்களின் ஊடாக மீள்குடியமர்ந்தோர் தமக்குரிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.