அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 26 பேருக்கும் விளக்கமறியல்!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 26 பேரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ.கே.துலானி எஸ்.வீரதுங்க உத்தரவிட்டார்.
திருகோணமலை, தேவேந்திர முனை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, பேருவளை, தேவேந்திர முனை ஆகிய பிரதேசங்களிலிருந்து சாந்த ஜுட், சயூரி, ராஜா என்ற பெயர்களைக் கொண்ட ரோலர் படகுகளில் சட்டவிரோதமாக இவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களை பொறுப்பேற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸி. செல்ல முயன்ற படகு காற்று, மழையினால் கடலில் தத்தளிப்பு! பேருவளை துறைமுகத்தில் 43பேர் படையினரால் மீட்பு
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 43 பேர் இரவு பேருவளை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வள்ளத்தின் மூலம் வென்னப்புவ கடற்கரையிலிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு இவர்கள் கடந்த 21ம் திகதி புறப்பட்டுள்ளனர்.
கடும் மழை, காற்று காரணமாக குறிப்பிட்ட பயணத்தை தொடர முடியாது வள்ளத்தைச் செலுத்திய நபர் தம்மை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 5,4 வயதுடைய இரு சிறுவர்கள் 8 பெண்களும் இக் குழுவில் அடங்குகின்றனர்.
இவர்கள் பயணம் செய்த வள்ளத்தையும் கடற்படையினர் கைப்பற்றி பேருவளை பொலிஸாரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைக்காக இவர்களை பேருவளை பொலிஸார் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
படகில் பயணித்த மேலும் 7 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர்.