சிறையில் தாக்குதலுக்குள்ளான தமிழ் கைதி ஆபத்தான நிலையில்! கூட்டமைப்பினர் பார்வையிட அனுமதி மறுப்பு!!

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரியவருகின்றது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இக் கைதியைப் பார்வையிடுவதற்காக அநுராதபுரம் சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியில்லாமல் தம்மால் அனுமதி வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதனால் அநுராதபுரம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அவசர அவசரமாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அவ்வாறு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள் கடுமையாகத் தாக்கி கை, கால்களை முறித்துள்ளனர் என தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது உறவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் அவசரமாக அநுராதபுரத்திற்கு விரைந்தனர்.

அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கைதிகள் குறித்து விசாரித்துள்ளனர். அதன்போது, இங்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் போகம்பரை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலினால் படுகாயமடைந்த கைதியொருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த தமிழ் அரசியல் கைதியின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதனையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குறித்த கைதியைப் பார்வையிட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.

சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியில்லாமல் தம்மால் அனுமதி வழங்க முடியாது என அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை சிறைப்பிடித்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதிகாரிகளை மீட்பதற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கபட்டதையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளை விசேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்தனர்.

இதனால், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையே சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.