போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குக!
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 30வருட காலமாக இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து, மண்ணெண்ணெய் விளக்கிலும், இருளிலும், பயங்கரக் குண்டுச்சத்தத்திலும் இடம்பெயர்ந்தும், உறவுகளை இழந்த நிலையிலும், தமது கல்வியைக் கற்றுவந்த எமது மாணவச் செல்வங்களின் பல்கலைக்கழக கல்வியின் பின்னரான வேலைவாய்ப்புக்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய குளறுபடிகளை உடன் நிறுத்தப்பட வேண்டும். தேவையற்ற அரசியல் தலையீடுகளை மனித நாகரிகத்திற்குப் புறம்பான அணுகுமுறைகளும் விலக்கப்பட வேண்டும்.
எழுபதுகளில் பேரினவாத அரசு தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டு மேற்கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டு தமது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியானதன் விளைவாக சிந்தித்து செயற்பட்டதன் பெறுபேறே பின்னர் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டமாக வலுப்பெற்றது.
இத்தகைய வரலாறு நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை புரிந்தும் புரியாததுபோல் புறக்கணித்து தனது நிகழ்ச்சி நிரலில் அரசு மீண்டும் எமது இளைஞர்களின் எதிர்கால வாழ்வு சூன்யமாவதை நோக்கியா செல்ல முற்படுகின்றது.
ஜூன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முல்லைத்தீவு அரச அதிபரால் நேர்முகத் தேர்வுக்கு பட்டதாரிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், வேலைவாய்ப்புத் தர்வு ஒழுங்குமுறைக்கு மாறாக, இம்மாவட்ட அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையானது அரசின்மீதே ஐயம் கொள்ள வைக்கின்றது.
இம்மாவட்டத்தின் வேலைவாய்ப்பில் இனவிகிதாரசாமோ வயது மூப்போ முன்னிலைப்படுத்தப்படாமல் பல்வேறு தெரிவுகள் இவ்வமைச்சரால் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு வேலைத் தேர்வில் தமிழ் இளைஞர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே கண்துடைப்பிற்காக உள்வாங்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், அமைச்சரால் தற்போது முறைகேடாக தெரிவு செய்யப்பட்ட 59 பட்டதாரிகளின் நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டு பொது நிர்வாக சேவையின் ஒழுங்கு விதிக்கமைவாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேர்முகத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் வவுனியா மாவட்ட பட்டதாரிகளுக்கும் உரிய நேர்முகத்தேர்வுகள் உரிய காலத்துள் முன்னெடுக்கப்படவும் அரசியல் தலையீடுகள் நீக்கப்படவும் வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
By:-yasi