கோத்தபாயவின் பணிப்புரைக்கு அமைவாக 5 தமிழ்க் கைதிகள் பூஸா முகாமிற்கு மாற்றம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய அவரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கைதிகள் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்ற சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 1982 ஆம் ஆண்டு திருத்த விதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒருவர் பாதுகாப்பு அமைச்சரினால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கின்றார் என கருதினால் அவரை விளக்கமறியல்சாலையில் இருந்து குறிக்கப்பட்ட ஓரிடத்தில் வைத்திருக்க முடியும் என்று கூறினார்.
இந்த சட்ட விதிக்கு அமையவே இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் பூஸா முகாமுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சாதாரரண விளக்கமறியல்சாலையில் இருப்பவர்களை அவர்களது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட முடியும்.
ஆனால் பாதுகாப்பு அமைச்சரின் கடித்தத்திற்கமைய குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றப்படுபவர்களை உறவினர்கள் பார்ப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி கிடையாது என்றும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கூறினார்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பத்துப் பேர் வரையில் இவ்வாறு விளக்கமறியல்சாலையில் இருந்து பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
By:-yasi