வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள அரசஅதிபர்

மன்னாரை அடுத்து வவுனியா மாவட்டத்துக்கும் சிங்கள அரச அதிபர் ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளது.

நேற்று ஜனாதிபதி செயலணி வடக்கின் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி யாழ்.மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றி வந்த இமெல்டா சுகுமார் அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. கொழும்பில் பதவியுயர்வுடன் கூடிய செயலர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதும், அவருக்கான பதவி இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றிய அருமைநாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

வவுனியா மாவட்ட அரச அதிபராகப் பணியாற்றிய சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் வவுனியா மாவட்ட அரசஅதிபராக, காலி மாவட்ட அரச அதிபராகப் பணியாற்றிய விஜேரட்ண சகலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக, இமெல்டா சுகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மாவட்டமான மன்னார் மாவட்டத்துக்கு அரசாங்கம் அண்மையில் சிங்கள அரச அதிபர் ஒருவரை நியமித்திருந்தது. அதற்கு தமிழ்கட்சிகள், பொதுஅமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

மன்னாரில் சிங்கள அரசஅதிபர் பொறுப்பேற்ற பின்னர் அங்கு சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதுடன், இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலை வைக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

இந்தநிலையில், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் சதித்திட்டத்தை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாகவே வவுனியா மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வடக்கில் உள்ள அரச தரப்பு அரசியல் வாதிகளுக்கும் மாகாண ஆளுநருக்கும் அரச அதிகாரிகளுடனான உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும் வேளையில் அரச அதிபர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் அரசியல் வாதிகள் போன்று செயற்படுகின்றனர். 
 
ஊடகங்களில் தம்மை முதன்மைப்படுத்துகின்றனர் என்று அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஒருவர் அதிகாரிகளை கடுமையாகச் சாடியிருந்தார். இத்தகைய ஒரு பின்னணியில் அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.