போரில் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசு, தமிழ் கூட்டமைப்பை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறது!

சர்வதேச தொழிலாளர் தினமான மேதின நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் 01 மே 2012  நடைபெற்றது. வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார்.

இதன்போது வவுனியா நகரசபையிலிருந்து வவுனியா இந்து இளைஞர்மன்றம், மணிக்கூட்டு கோபுரம், வவுனியா காவல்நிலையம் வழியாக மீண்டும் வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடையும் வகையில் ஒரு ஊர்வலமும் நடைபெற்றது.

ஊர்வலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களன த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபை தலைவர், வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை தலைவர், வவுனியா வடக்கு பிரதேசபை தலைவர், கரைச்சி பிரதேசசபை தலைவர், உபதலைவர்கள், உறுப்பினர்கள், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வந்திருந்தவர்களை வவுனியா நகரசபை தலைவர் ஐ.கனகையா வரவேற்றதுடன், நன்றியுரையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தலைவர் சிவலிங்கம் வழங்கினார். இந்நிகழ்சில் வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் ஐவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்விற்குத் தலைமைதாங்கி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:

ஏனைய உலக நாடுகளில் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களுக்கான விழா எடுப்பதாக அமைகின்றது. எமது நாட்டில் வடக்கு-கிழக்கைப் பொறுத்தமட்டில் இது தொழிலாளர்களை மட்டும் உள்ளடக்கிய நிகழ்வாக இதனை எம்மால் நிகழ்த்தமுடியவில்லை.

எமது மண்ணில் நீண்டகாலமாக நாம் குரல்கொடுத்து வரும் வாழ்வுரிமை உட்பட அடிப்படை உரிமைகளையும் வலியுறுத்தும் ஒருநாளாகவே எம்மால் இத்தினத்தை அனுட்டிக்க முடியும். ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களுக்கான ஒரு முக்கிய நாளாகவே இத்தினத்தினை நாம் அணுகவேண்டியுள்ளது.

எமது நாட்டில் பல்லாயிரக்கணக்கா இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் தென்னிலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி வாழ்கின்ற குடும்பங்கள், அவர்களது பிள்ளைகள் கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்ற விடயங்கள் கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகின்றனர்.

தென்னிலங்கை மக்களைப் பொருத்தவரை விலைவாசி ஏற்றம் மட்டும்தான் அவர்களுடைய பிரச்சினை. ஆனால் வடக்கு-கிழக்கு மக்களைப் பொருத்தவரை ஏற்கனவே வருமானம் ஈட்டித்தரும் குடும்ப உறுப்பினரை இழந்து பொருளாதாரரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் இப்பொழுது நிலவுகின்ற விலைவாசி ஏற்றத்தினாலும் பெரும் துன்பப்படுகின்றனர்.

போர்க்காலத்தில் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்காமையால் எமது மக்கள் அன்று குண்டுவீச்சுக்குப் பலியானதுடன் பட்டினியாலும் மடிந்தார்கள். இன்று அதே நிலையை அரசாங்கம் வேறுவிதமாகச் செய்கின்றது.

குடும்பத்தலைவர்களையும் இளைஞர்களையும் தடுப்பில் வைத்துள்ளதுடன், காணாமல் போகவும் செய்துள்ளது. இதனால் மீண்டும் ஒருமுறை இத்தகைய குடும்பத்தினர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆண்துணையின்றி வாழுகின்ற குடும்பங்கள் சடுதியில் பெருகிவிட்டதால் இதுவரை வீட்டுநிர்வாகத்தை மட்டுமே ஏற்றுவந்த பெண்கள் இப்பொழுது பொருளாதாரத்தையும் ஈட்டி குடும்ப நிர்வாகத்தையும் கொண்டுசெல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எதுவித பணிஅனுபமும் அற்ற பெண்களின் இந்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆகவே விலைவாசி ஏற்றம் என்பது வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை ஏனைய பகுதிகளைவிட மோசமாகப் பாதித்துள்ளது. எனினும் எமது மக்கள் விலைவாசி ஏற்றத்தை மட்டும் கணக்கிலெடுக்காமல் தமது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்பதையே இன்றைய ஊர்வலத்தில் வலியுறுத்தினர். அவர்களின் இந்த உணர்வுதான் எம்மைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கில் உண்மையான சுதந்திர சுவாசக்காற்றை அனுபவிப்பதற்கான உரிமைகளை வலியுத்தி இம் மேதினத்தை அனுட்டித்துக்கொண்டிருக்கின்றது.

எமது மக்கள் என்றைக்கு தென்னிலங்கை மக்களைப்போன்று சுதந்திரமாகத் தமது கருத்துக்களை எடுத்துரைக்க முடிகின்றதோ, எவ்வித அச்சமுமின்றி இரவு நேரங்களிலும் தெருக்களிலும் நடமாட முடிகின்றதோ, தனது பிரதேசத்தில் தங்களுக்கான அபிவிருத்தியைத் தாங்களே தீர்மானிக்க முடிகின்றதோ, தங்களது பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்ய முடிகின்றதோ அன்றுதான் எமது தொழிலாளர்களுக்கு உண்மையான மேதினமாகும். ஆகவே இந்தநாளானது எமது பிரச்சினைக்கு ஒரு முழுமையான அரசியல் தீர்வை வலியுறுத்தும் தினமாகவே நாம் அனுட்டிக்கின்றோம்.

இந்த அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அன்றாட பிரச்சினைகள் தொடக்கம் நிரந்தர அரசியல்தீர்வுவரை கடந்த ஓராண்டிற்றும் மேலாக பலசுற்றுப் பேச்சுவார்த்கைளை நடாத்தியும் இதுவரை எத்தகைய முடிவும் எட்டப்படவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அண்மையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்கு வந்துவிடக்கூடாது என்று இந்நாட்டு அரசு தானாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்னும் ஆணைக்குழுவை நியமித்தது.

அந்த ஆணைக்குழுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையில் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. அதில் ஏற்றுக்கொள்ள முடியாத பல விடயங்கள் இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தை நெறிப்படுத்தக்கூடிய சில பரிந்துரைகளும் இருந்தன. இதனை நடைமுறைப்படுத்தும்படியே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம்கொடுத்தன. அதனை வலியுறுத்தியே ஜெனிவாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த அரசு தான் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தும்படி சர்வதேசம் கொண்டுவந்த தீர்மானத்தை தனக்கு எதிரான தீர்மானம் என்று திசைதிருப்பியது.

இன்று அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர். ஜெனிவாவில் அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்டவர்கள் இங்கு வந்ததும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள்.

தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் குறிப்பாக தந்தை செல்வா முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புவரையும் ஏமாற்றி வந்தவர்கள் இன்று சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனால் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் இந்த அரசு இன்று ஒருபாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த நெருக்கடியிலிருந்து அவ்வளவு எளிதில் மீளக்கூடியதாகத் தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆதரவற்ற அவலநிலை இன்று இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவுற்றவுடன் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதாக சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்தது.

ஆனால் போரை நடத்துவதற்கு அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் போருக்குப்பின்னர் தான் வழங்கிய உறுதிமொழியை மீறியதுடன், இந்நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடே கிடையாது என்று சொன்னதுடன், முன்னெப்பொழுதையும்விட தமிழர்களின்மீதான ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்தியது.

இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவு அமைச்சர், அண்மையில் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தலைமையில் இந்நாட்டிற்கு விஜயம் செய்த இந்தியப் பாராளுமன்றகுழுவினர் ஆகியோரிடம் இந்நாட்டு அதிபர் பதிமூன்றாவது திருத்தச் சட்டத்திற்கும் மேலாகச் சென்று தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பேன் என்று வாக்குறுதி வழங்கினார்.

ஆனால் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தவுடன் நான் அப்படிச் சொல்லவில்லை என்று இங்குள்ள ஊடகங்களுக்கு மறுப்பறிக்கை விடுகிறார். அரசின் இந்த அறிக்கையால் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்த்து நீங்கள் பாராளுமன்றத் தெரிவிக்குழுவிற்கு வாருங்கள் என்று இந்த அரசாங்கம் சொல்கிறது. இரண்டு தரப்பினர் பேசியே ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளடங்கப்போகும் அதிதீவிர சிங்கள இனவாதிகளுடன் பேசி எத்தகைய தீர்வை எட்டமுடியும்? எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயலே அன்றி வேறில்லை என்பது எமது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தந்தை செல்வா முதல் பிரபாகரன்வரை அனைவரையும் ஏமாற்றிவிட்டோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏமாற்றிவிடலாம் என்று இந்த அரசு நினைக்கின்றது. போரில் வெற்றியீட்டிய மமதையில் இந்த அரசு இருக்கின்றது.

விடுதலைப்புலிகளையோ, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையோ அல்லது தந்தை செல்வாவையோ ஏமாற்றியதுபோல் இந்த அரசு சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கின்றது. இங்குதான் அரசு மாபெரும் தவறைச் செய்கின்றது. இனியும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இப்பொழுது நடைபெறுபவைகளை நீங்கள் அறிவீர்கள்.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகிறார். இவர் அங்கு சென்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டு வரவிருக்கிறார்.

குறிப்பாக வட-கிழக்கிலிருந்து எவ்வளவு காலத்திற்குள் இராணுவத்தை வெளியேற்றப் போகிறீர்கள்? எங்கிருந்து வெளியேற்றப் போகிறீர்கள்? எப்படி வெளியேற்றப் போகிறீர்கள்? மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரை எவ்வளவு காலத்திற்குள் மீள்குடியேற்றத்தைச் செய்து முடிப்பீர்கள்? தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எத்தகைய அணுகுமுறைகளை வைத்துள்ளீர்கள்? எவ்வளவு காலத்திறகுள் எத்தகைய அதிகாரங்களை வழங்கப்போகிறீர்கள்? போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அமெரிக்காவிடம் எழுத்துமூலம் வழங்கிவரவேண்டிய ஒரு கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இன்றைய சர்வதேச அரசியல் நிலை தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு சாதகமான சூழலைத் தோற்றுவித்துள்ளது. ஆகவே இந்தத் தொழிலாளர் தினத்தில் எம்மிடையே தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல் கட்சிகள் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆத்மார்த்தமான ஐக்கியத்துடன் இணைந்து கனிந்து வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையை நாம் பற்றிப் பிடிக்க வேண்டும்.

எம்மைப் பிரிப்பதற்குப் பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது தலைவர்கள் மத்தியில் ஆத்மார்த்தமான ஒரு ஐக்கியம் வரவேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் நீங்கள் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இன்று நீங்கள் அதனை நிறைவேற்றியுள்ளீர்கள். இது தொடரவேண்டும்.

இன்று நாம் நடத்திய இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும் எமது மக்களுக்கு நிச்சயம் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கின்றேன். இனியும் எம்மீதான அடக்குமுறைகள் தொடருமானால் அகிம்சைவழியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.

கடந்த முப்பதாண்டுகளில் நாம் எத்தனையோ உயிர்களைப் பலிகொடுத்துள்ளதுடன் கணக்கிடமுடியாத அளவிற்கு சொத்துக்களையும் இழந்துள்ளோம்.

ஆகவே இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை அடைவதற்கு திடசங்கல்பம் ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.