என்னிடம் வருபவர்கள் சிரிப்பை மறந்து நெடு நாட்களாகி விட்டது!- திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்தில் மனநல மருத்துவர் சிவதாஸ்

யுத்த சூழலில் சிக்கி, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இன்று கை மற்றும் கால்கள் செயலிழந்து காணப்படும் இவர்கள் உங்களிடம் இருந்து அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை.

அவர்களிடம் பாசமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் என மனநல மருத்துவர் சிவதாஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பான "உயிரிழை" நிறுவனத்திற்கு நிதி சேர்க்குமுகமாக, நேற்று மாலை திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பட்டிமண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களின் பின்னர் மக்களிடமிருந்து உண்மையான சிரிப்பைக் காணக்கூடியதாக இருந்தது. தன்னிடம் வருகின்றவர்கள் சிரிப்பதையே மறந்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. எனவே இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும். இதன்மூலம் மக்களின் உள்ளங்களை எளிதில் ஆற்றுப்படுத்த முடியும் என்று மனநல மருத்துவர் கூறினார்.

நிகழ்வில், செல்வி சொர்ணமுகி வரவேற்புரையும், செல்வி துஷ்யந்தினி உயிரிழை உயிரோட்டம் என்னும் தலைப்பில் கவிதை வாசித்தார். வவுனியா இறைம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரண்டு கைகளையும் இழந்த மாணவி கீபோர்ட் வாசித்ததுடன் பாடலையும் பாடினார்.

லியோனி உயிரிழை நிறுவனத்திற்கு ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.இரதன், மனநல மருத்துவர் சிவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.