முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நூல்களாக வெளியிட எழுத்தாளர்கள் முன்வரவேண்டும்!- வவு. நகரசபை உபதலைவர் ரதன்
தமிழினத்தின் வரலாற்றில் நடைபெற்று முடிந்த துயரங்களும், துன்பங்களும், சோதனைகளும் காலத்தால் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தமிழர்களின் மனங்களிலும் சிங்கள பேரினவாதிகள் தந்த வலிகள் ஆறாத வடுக்களாக பதிந்திருக்கின்றன. இதன் உச்சம் தான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது என எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கலைச்சூரியர் அமைப்பின் அனுசரணையோடு இளம் கவிஞர் சிவானந்தராசா மலர்கதன் எழுதிய "வைகறை ஒன்றில்" என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு கலைசூரியர் அமைப்பின் தலைவர் கா. அபராஜிதன் தலைமை தாங்கியதோடு, மனநல வைத்தியர் எஸ்.சிவதாஸ் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வவு. நகரசபையின் உபதலைவர்,
இன்றைய நிகழ்வு இளம் கவிஞன் ஒருவன் தனது உள்ளத்து கிடக்கைகளை வெளிக்கொண்டுவர எழுதிய கவிதை நூல் வெளியீடு. இதனை வெளியீடு செய்கின்ற கலைசூரியர் அமைப்பு போரின் வடுக்களையும் துயரங்களையும் அனுபவங்களையும் மனதில் சுமந்து வாழ்பவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது எதிர்காலத்தில் பல உண்மைகளை எமது தேசத்திற்கு உணர்த்தும் என நம்புகிறேன்.
இந்நூலில் பொறிக்கப்பட்டுள்ள வசனங்கள் எமது தேசத்தின் கடந்த கால நிகழ்வுகளை எமக்கு கண்முன் கொண்டு வருகின்றது. இக்கவிதை நூலின் ஊடாக எமது தேசத்தில் கவிஞர்கள் உருவாக்கப்பட்டிருகின்றார்கள் என்ற செய்தியினைத்தான் நாம் அறிய முடிகின்றது.
எமது போரின் நிலைப்பாடு இறுதியாக இடம்பெற்ற எமது போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் வரை சென்று அதிலிருந்து வந்த இரண்டு வருடத்திற்கு மேல் தான் முட்கம்பி வேலிக்குள் அனுபவித்த விடயங்களை இந்த கவிஞன் நூல் வடிவிலே ஆக்கித்தந்திருக்கின்றான்.
1948ம் ஆண்டுக்கு பின்னர் எமது இனம் சந்தித்த போராட்டங்களும் குறிப்பாக, முப்பது வருடகால ஆயுத போராட்டம் 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்காலுடன் முடக்கப்பட்ட பின்னர் எமது இனம்சார்ந்த புரட்சிகரமான, எழுச்சிகரமான சிந்தனைகளை அச்சுறுத்தல்கள் மிகுந்த சூழ்நிலைகளுக்குள்ளும் வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் பல எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இப்படிப்பட்ட ஓர் கவிஞனை வவுனியா நகரசபை சார்பிலும் வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயக உறவுகள் சார்பிலும் புலம்பெயர்ந்த எமது சமூகத்தின் சார்பிலும் பாராட்டுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
உண்மைய தேசியத்திற்காக தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் பயணிக்கும் ஜனநாயக போராளியாகிய எங்களுக்கு இக்கவிஞனின் சில கவிதை வரிகள் உற்சாகத்தை தருகின்றன. எமது இனத்தின் உண்மை போராட்டத்திற்கு வலுச்சேக்கின்றது.
நாம் மீண்டும் ஒரு ஆயுத போரை விரும்பவில்லை. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் எங்களையே நாங்கள் ஆளும் சூழ்நிலை வரை எங்களின் போராட்டத்தில் மாற்றம் இல்லை. போராட்ட வடிவங்கள் மாறின. ஆனால் எமது இலட்சியங்கள் மாறவில்லை. இதனை ஒவ்வொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக போராளிகளும் சுமக்கவேண்டும் என ரதன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் எமது தேசத்தில் நாம் புதிய சிந்தனையில் புதிய மாற்றத்தின் அடிப்படையில் நோக்கமுடியும். அடைக்கப்பட்ட எமது இளைஞர்கள் யுவதிகளுக்கு எப்போது முழுமையாக விடுதலை கிடைக்கும் என நம்மவர்கள் ஏங்கி நிற்கும் ஓர் சூழ்நிலையில் கடந்தகால தியாகங்களை நாம் எமது மனங்களில் சுமந்து கொண்டு உண்மைகள் உறங்குவதில்லை.
சத்தியங்கள் தோற்பதில்லை, தர்மங்கள் அழிவதில்லை. இதுவே எமது நிலைப்பாடு என பயணிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்