இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளதென்பதன் குறியீடே வவுனியா உண்ணாவிரதம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர் நிலங்கள் பல்வேறுப்பட்ட வகையிலும், போர்வையிலும் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்பட்டு வரும் நிலையினை, சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாக, மூன்று பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் திங்கட்கிழமை வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இந்த உண்ணாநிலைப் போராட்டம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இன்று திங்கட்கிழமை செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டிருந்தது.
முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவில், தமிழர்களுக்கான அரசியல் வெளி முற்றாக இல்லாதிருந்த நிலையில், தமிழர்களின் உரிமைப் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதனையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் மீண்டும் வலியுறுத்தியுறுத்தி நிற்பதோடு,
மே-2009க்கு பின்னரான தமிழர் தரப்பின் முதலாவது அமைதி வழியிலான உரிமைப் போராட்டத்தின் தொடக்கமாகவும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை கவனத்தில் கொள்ளலாம் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதியில், தமிழர் தரப்பினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய அமைதிவழிப் போராட்டங்கள் மூலம், எமக்கான அரசியல் வெளி மெது மெதுவாக இலங்கைத்தீவில் விரிவதோடு, நிலத்திலும் - புலத்திலும் இத்தகைய ஜனநாயகவழிச் செயற்பாடுகள் சமாந்திரமாக முன்னெடுக்கபடும் பொழுது, தமிழர்களின் உரிமைப் போராட்டம் வீச்சுப் பெறும் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகளையும் - அபிவிருத்திகளையும் முன்னிறுத்தி, சிறிலங்கா அரசாங்கத்தினால் முதன்மைப்படுத்தப்பட்டு வரும் தேர்தல் அரசியலுக்குள், எமது விடுதலைப் போராட்டம் பயணிக்க முடியாது என்பதனையும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் வலியுறுத்தி நிற்பதாகவே தாங்கள் கருதுவதாகவும் நா.த.அராசங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By:-yasi