வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பாணையை பொலிஸார் புறக்கணிப்பு
கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி காணாமற் போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் கொழும்புக்கு பயணித்த 10 பேருந்துகளை தடுத்து நிறுத்தியமை தொடர்பான விசாரணைகளுக்கு வவுனியா மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாருக்கு அழைப்பாணை விடுத்த போதிலும் பொலிஸார் சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த 05.03.2013 அன்று காணாமற் போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து சுமார் 700 பேர் கொழும்பு நோக்கி ஐக்கிய நாடுகள் சபையிடம் தங்கள் உறவுகளை தேடித் தருமாறு மனு ஒன்றைச் சமாப்பிக்கச் செல்ல முயன்ற போது அவர்கள் பிரயாணம் செய்த 10 பேரூந்துகளைத் தடுத்து பிரயாணிகள் செல்ல அனுமதி மறுத்தமைக்கு எதிராக கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மனுச் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரிப்பதற்காக விசாரணையொன்றுக்கு வருமாறு வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் காணாமற் போனோரின் உறவுகள் சங்கத்தின் தலைவர், செயலாளர்களான மனுவல் உதயச்சந்திரா, தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதற்கமைய தலைவர் மன்னாரில் இருந்தும் செயலாளர் முல்லைத்தீவிலிருந்தும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், அருட்தந்தை செபமாலை, செயலாளர் பே. பி.சிந்தாத்துரை ஆகியோருடன் வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சமூகமளித்த போதிலும், வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் சமுகமளிக்கவில்லை.இதனால் இவ்விசாரணை நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By:-yk