வவுனியா கோவில்குளத்தில் புனரமைக்கப் படாதுள்ள சிறுவர் பூங்கா-
வவுனியா கோவில்குளத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப் படாதுள்ள சிறுவர் பூங்காவை, புனரமைத்து மக்கள் பாவனைக்கு விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996ம் ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொறுப்பில் இருந்த நகரசபையினால் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவானது, அதன் பின்னர் புனரமைப்புக்கள் எதுவும் செய்யப்படாது, கவனிப் பாரற்றுள்ளது. தற்போதைய நகரசபையும் அதனை கண்டுகொள்ளாதுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சிறுவர் பூங்காவில் தினமும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அங்குள்ள கிணறில் மதுப்போத்தல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த மக்கள், சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதியெங்கும் பாத்தீனியம் படர்ந்து காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடச் சென்றால் ஒவ்வாமை ஏற்படும் என்பதனால் அப் பகுதிக்குள் எவரும் செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் பொறுப்பில் நகரசபை இருந்த போது அமைக்கப்பட்ட இளங்கோ அடிகளாரின் சிலையும் பராமரிப்பற்று காணப்படுகிறது. தற்போதைய நகரசபை கவனம் செலுத்தாமை கவலையளிக்கிறது எனவும் மக்கள் கூறுகின்றனர்.