வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் முறுகல்; அனுமதியில்லாத மரக்கறி வியாபாரமே காரணம்
வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கும் மரக்கறி வியாபாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நகரசபையின் அனுமதியின்றி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்த மரக்கறிகளை நகரசபை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை பறிமுதல் செய்தனர். இதன்போதே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் மரக்கறி மொத்தக் கொள்வனவு நிலையம் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் என்பன இயங்கிவருகின்றன. இந்த நிலையில், நகரசபையின் அனுமதி பெறாது ஏனைய இடங்களில் மரக்கறி வியாபாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இவற்றைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக அனுமதி பெறாது மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது:
"எமது ஜீவனோபாயத்தைக் கொண்டு நடத்துவதற்கே தாம் சிறு தொழிலாக மரக்கறி வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றோம். எமக்கு வியாபாரம் செய்ய அனுமதி தருமாறு நகரசபையிடம் கோரியிருந்தபோதிலும், அவர்கள் இதுவரை அனுமதி தரவில்லை'' என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் வீ.வசந்தகுமாரிடம் கேட்டபோது;
"நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் மரக்கறிச் சந்தை இயங்கி வரும் போது அனுமதி பெறாது எவரும் மரக்கறிகளை விற்பனை செய்யமுடியாது. அத்துடன் வேறு தேவைகளுக்காகப் பெறப்பட்ட வர்த்தகக் கட்டடத் தொகுதியில் மரக்கறிகளை விற்பனை செய்வதனால் மரக்கறிச் சந்தையில் உள்ளவர்களும் வெளியில் வந்து வியாபாரம் செய்யும் நிலை ஏற்படும்.
இவ்வாறான நிலையில் எமக்கு சந்தைக் கட்டமைப்பை மேற்கொள்வதில் கடினமான தன்மை ஏற்படும். ஆகவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்றார்.