வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற கச்சியப்பர் விழா!
வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய கச்சியப்பர் விழாஅண்மையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மங்கலவிளக்கினை வேலுச்சாமி சத்தியநாதன், காந்தி தம்பதியர் ஏற்றிவைத்தனர்.
திருமுறையினை திருமதி சௌந்தரராஜா குருக்கள் பானுரேகா ஓதினார். தமிழ் வாழ்த்தினை வவுனியா, இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலய இசைத்துறை ஆசிரியை திருமதி தாட்சயிணி கணேசநாதன் பாடினார். தொடக்கவுரையினை வவுனியா நகர சபையின் செயலாளர் வே.வசந்தகுமார் நிகழ்த்தினார்.
தலைமையுரையினைத் தொடர்ந்து மாணவர் உரை அரங்கம் இடம்பெற்றது. கச்சியப்பர் என்னும் பொருளில் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் மாணவி செல்வி ஜெசிந்தா ஆனந்தமூர்த்தியும், கந்தபுராணம் என்னும் பொருளில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் மு.துவிஜனனும் உரையாற்றினார்கள். கௌரவம் வழங்கும் நிகழ்ச்சியில் கந்தபுராணபடன வித்தகர், அருளுரைவாரிதி, சுழிபுரம் மாதவர் மார்க்கண்டு, ஓய்வு பெறும் கிராம சேவை உத்தியோகத்தர் மயில்வாகனம் தியாகராஜா ஆகியோர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள். இக்கௌரவிப்பு நிகழ்வினை மா.நந்தகுமார் கவினுறத் தொகுத்து வழங்கினார்.
அடுத்து நடைபெற்ற கந்தபுராணக் கருத்தரங்கில் “வேலும் வில்லும்” என கவியெழில் திருமதி த. நிறைமதி, “கந்தபுராண கலாசாரம்” என சிவ.கஜன், “கந்தபுராணத்தில் சைவசித்தாந்தம்” என திருமதி வி.முருகேசம்பிள்ளை, “கந்தபுராணம் காட்டும் பண்பாடு” என கவிச்சிகரம் கி.உதயகுமார், “கந்தபுராணத்தில் இலக்கியச்சுவை” என ஆ.லோகேஸ்வரனும் நல்ல முறையில் கருத்துரைகளை வழங்கினர். இக்கருத்தரங்கத்திற்கு தமிழருவி த. சிவகுமாரன் நடுவராக கடமையாற்றினார்.
நிறைவாக நடைபெற்ற நாட்டிய அரங்கில், வவுனியா நர்த்தன சேஷ்திராலயா நடனப்பள்ளி இயக்குனர், செல்வி. பாலசுப்பிரமணியம் ஜெயசீலாவின் நட்டுவாங்கத்தில் “அழகுத் தெய்வம்” என்னும் நாட்டிய நாடகம் சிறப்பாக இடம்பெற்றது. ஒரு மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.