வவுனியா கொக்காச்சான்குளத்தில் மேலும் 700 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்!


வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழ்க் கிராமமான கொக்காச்சான்குளத்தில் மேலும் 700 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொக்சாச்சான்குள கிராமத்தின் பெயரும் சிங்களப் பெயராக மாற்றப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார்.
 
வவுனியா மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மிகவும் மோசமாக மாற்றியமைக்கும் வகையில் நன்கு திட்டமிட்ட முறையில் இராணுவத்தின் ஆதரவுடன், இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 
வவுனியா பிரதேச செயலகப் பிரவுக்குட்பட்ட கொக்காச்சான்குளத்தில் ஏற்கனவே 300 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. இங்கு 3,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதை இலக்காகக் கொண்டே அரசாங்கம் தன்னுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
 
இது தொடர்பில் சிவசகத்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'வவுனியா பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட கொக்கச்சான்குளம் பாரம்பரியமான ஒரு தமிழ்க் கிராமமாகும். இங்கு கடந்த வருடத்தில் 300 சிங்களக் குடும்பங்கள் இராணுவ ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டது. இதன்பெயரும் கலாபோகஸ்வௌ என சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. இப்போது மேலும் 700 குடும்பங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் இங்கு குடியேற்றத்துக்காகக் கொண்டுவரப்பட்டு, நேற்று திங்கட்கிழமை (11-02-2013) குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆளும் கட்சி எம்.பி. நாமல் ராஜபக்ஷ நேற்று இங்கு விஜயம் செய்து குடியேற்றவாசிகளுக்கான உதவிகளை வழங்கினார்.
 
இந்தக் கிராமத்தில் 3,000 சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றுவதுதான் அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. வவுனியாவிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இதற்கான முயற்சிகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றார். இந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் கடந்த கால வன்முறைகளின்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் இப்போது சிங்களவர்கள் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்படுவதால் தமிழர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு தமிழர்களின் காணிகள், வயல் நிலங்கள் என்பன பெருமளவுக்கு உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. 
 
குடியேற்றப்படும் சிங்களவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக அவர்களுடைய பாவனைக்காக சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. வேறு பாவனைப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைவிட மின்கம்பங்கள் நாட்டப்பட்டு மின் விநியோகமும் வழங்கப்படுகின்றது. வீதிகளும் அமைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சிங்களக் குடியேற்றவாசிகள் மேலும் குடியேறுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள். மேலும் வசதிகள் செய்து தரப்படும் என்ற வாக்குறுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
வவுனியாவின் இனவிகிதாசாரத்தைப் பெருமளவுக்குப் பாதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே மன்னார், முலலைத்தீவு மாவட்டங்களிலும் நெடுங்கேணி அரியகுண்டான் பகுதியிலும் பெருமளவு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அரியகுண்டானின் பெயரும் பெயரும் அதாவெட்டுவௌ என சிங்களப் பெயராக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல, கொக்காச்சான்குளத்தில் வசித்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், சிங்களவர்கள் அங்குகொண்டுவரப்பட்டு பெருமளவுக்குக் குடியேற்றப்படுவதும் இதன் பெயரையும் சிங்கப் பெயராக மாற்றுவதும் திட்டமிடப்பட்ட வகையிலான ஒரு நில ஆக்கிரமிப்பாகவே கருதப்பட வேண்டும்.
 
போர் முடிவுக்கு வந்தபின்னர் மீள்நல்லிணக்கத்துக்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் கூறிக்கொள்ளும் நிலையில், இவ்வாறான ஆக்கிரமிப்புக்களே இடம்பெறுகின்றன என்பதை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக முரண்பாடுகளையும், சந்தேகங்களையுமே மேலோங்கச் செய்யும் என்பதால் இவ்வறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
 
இதேவேளையில், வன்னியிலுள்ள காடுகள் பலவும் அழிக்கப்பட்டு அங்கு அங்கு முஸ்லிம்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் முஸ்லிம்கள் முன்னர் ஒருபோதும் வசித்தவர்களல்ல. ஆனால், மாவட்டத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைத்து, அடுத்துவரும் தேர்தல்களில் தமது வெற்றிவாய்ப்பை அதிகரித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட சில சக்திகளே இதன் பின்னணியில் செயற்படுகின்றன. இந்த சுயநலன்கொண்டவர்களின் செயற்பாடுகளால் காலம்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த மக்களிடையே விரோதம் விதைக்கப்படுகின்றது. இனநல்லுறவு பேணப்படவேண்டுமானால், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.'
இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.