யாழ்ப்பாணத்தில் தொடரும் அடை மழை!
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்ற இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பலத்த காற்று இடி மின்னலுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
நேற்றைய தினம் 54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 79.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலியில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றுடன் கூடிய மழையானது மேலும் ஒரு கிழமைக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் அடை மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு சில இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆனால் இதனை உடனடியாக உறுதி செய்து கொள்ள முடியிவில்லை.
இதேவேளை மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை நீடிப்பதாகவும், காற்றழுத்த தாழமுக்க காலநிலை நீடிப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும், யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இரவு பகல் மழை பெய்தவண்ணமே உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் தாழமுக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந் சில நாட்களாக பெய்துவரும் மழைகாரமான 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்வாகவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த 3318 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 1003 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 571 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 குடும்பங்கள் நல்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.