ரிஸானா நபீக் - தன்னிலை விளக்கம்!
சவுதியில் பணிப்பெண் வேலைக்கு சென்ற தமிழ் பெண் ரிஸானா பொய் குற்றச்சாட்டில் ஷரீஆ சட்டத்தின்படி தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைப்பட்டிருக்கிறது. 2007- இல் ரிஸானா தன்னிலை விளக்கம் அளித்த அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் சாரம்சம் தட்டச்சு வடிவில் கீழே தரப்பட்டுள்ளன.
-------
30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.
"அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை!”
ரிஸானா நபீக்.