யாழ். தனியார் பஸ்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு
யாழ். மாவட்ட சிற்றூர்த்தி சேவைச் சங்கங்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை சாலை பஸ் சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது அச்சுவேலி சங்கத் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது அச்சுவேலி பஸ் நடத்துனர் வயிற்றில் போத்தலினால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை – யாழ்ப்பாண சாலையில் கடந்த காலத்தில் இணையத்தினால் நேரக் கணிப்பாளர்கள் ஆவரங்கால், கோப்பாய், முத்திரைச் சந்தி ஆகிய இடங்களில் கடமைக்கு அமர்த்தி, பருத்தித்துறையில் இருந்து யாழப்பாணத்திற்கும், அச்சுவேலி – யாழ்ப்பாணம் சேவையினையும் நடைமுறைப்படுத்தி நேர அட்டவணை தயாரித்து நடைமுறைப்படுத்தி வரப்பட்டதாகவும் பொ.கெங்காதரன் கூறினார்.
அத்துடன், பருத்தித்துறை சாலை தனியாக இயங்க ஆரம்பித்த பின்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நேரக்கணிப்பாளர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடமும், அவர்களுக்கு உரியவர்களுக்கும் தெரியப்படுத்தியும் ஒன்றிணைந்து செயற்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்தும் இப்பிரச்சினை நடைபெறுவதால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை ஏற்படுமென்றும், இப்பிரச்சினையை உரியவர்கள் தீர்த்து வைக்கும் வரையில் திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.