யாழ்., கிளிநொச்சி, விசுவமடு பகுதிகளில் வைபவங்கள்
தைத்திருநாளை முன்னிட்டு வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தைப்பொங்கல் விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள முருகன் கோயிலில் பிரதான சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, விசுவமடு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிளிநொச்சி முருகன் கோயிலில் இன்று காலை 6.00 மணிக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து விசுவமடு பிரதேசத்தில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் தைப் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. புனர்வாழ்வு வழங்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாலை 4.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
வட மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகர சபை மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொண்டனர்.
இதேவேளை, வவுனியாவில் இறுதியாக மீள் குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் இன்றும் மன்னார் நகர சபை மண்டபத்தில் நாளை 15 ஆம் திகதியும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.