மெசஞ்சரை மூடி ஸ்கைப் திறங்க
மைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்த 2013 தொடக்கத்தில், தன் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் வசதியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும், ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மெசஞ்சரில் உள்ள அனைத்து காண்டாக்ட் முகவரிகளை, ஸ்கைப் புரோகிராமிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இப்போதே தருகிறது.
இப்போதே, மெசஞ்சரில் உள்ள காண்டாக்ட் முகவரிகளை ஸ்கைப் பயன்படுத்துபவர்கள் எடுத்து இயக்கலாம். இரண்டும் பயன்படுத்துபவர்கள், இரண்டிலும் உள்ள முகவரிகளை, ஸ்கைப் தொகுப்பில் ஒருங்கிணைக்கலாம்.
வாடிக்கையாளர்கள், எங்கள் தொகுப்பின் வசதிகளைப் பயன்படுத்தும் அனுபவத்தினை மேம்படுத்தும் அதே நேரத்தில், அதனை எளிமைப்படுத்தவும் முயற்சிக்கிறோம். அதற்காகவே இந்த மாற்று ஏற்பாடு என ஸ்கைப் நிறுவனத் தலைவர் டோனி பேட்ஸ் அறிவித்துள்ளார்.
ஸ்கைப் தொகுப்பினை ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தலாம். லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்திப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோ அழைப்புகளை குழுவாக ஏற்படுத்தலாம்.
ஸ்கைப் மற்றும் லைவ் மெசஞ்சர் இணைப்பு குறித்து இன்னும் தகவல்கள் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. கட்டணம் செலுத்தி ஸ்கைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் வசதிகளை அளிக்க மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது.
இருப்பினும் மெசஞ்சர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அனைத்து மெசஞ்சர் வாடிக்கையாளர்களைக் கையாளும் அளவிற்கு ஸ்கைப் திறன் கொண்டுள்ளதா? மெசஞ்சரில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், ஸ்கைப் தொகுப்பில் கிடைக்குமா? என்று கேட்டுள்ளனர். இதற்கான பதில் விரைவில் கிடைக்கலாம். ஸ்கைப் நிறுவத்தினை, மைக்ரோசாப்ட் 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் வாங்கியது. 850 கோடி டாலர் பணம் கொடுத்தது.