பரபரப்புச் செய்திகளுக்காக மிகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள்! ரிசானா குடும்பம் கவலை


கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர்.
ரிசானாவின் வீட்டுக்கு திரள்திரளாக வரும் ஆயிரக்கணக்கான மக்கள் ரிசானாவின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுக்கு என்னதான் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருகின்றபோதும் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்தவர்களாகவே அவர்கள் இருப்பதாக மூதூர் பள்ளிவாசல் கதீப் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள், அரசியல் வாதிகள், சமூகநல இயக்கங்களின் முக்கியஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் அங்கு வந்து உதவிகள் அளிக்க முன்வந்தபோதும் அவற்றைப்பற்றி சிந்திக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.
யாராவது உதவிகளை வழங்கினால் கண்ணீரே அவர்களுக்கு பெருக்கெடுக்கின்றது. அந்தப் பிரதேசம் சோகமாகவே இன்னும் காட்சியளிக்கின்றது. மூதூரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தமது சொந்த வீட்டில் மரணம் நடந்த உணர்வையே காணமுடிகின்றது.
இதேவேளை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் ரிசானாவின் குடும்பத்துக்கு எண்ணற்ற உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.
ரிசானாவின் குடும்பத்துக்கென வீடு வழங்க பல நிறுவனங்களும் அரசாங்கமும் முன்வந்துள்ளபோதும் எவற்றிலுமே சந்தோசம் கொள்ளும் ஒரு மனநிலையில் இப்போது அந்தக் குடும்பம் இல்லை. எதை யுமே பொருட்படுத்துவதாக அவர்கள் இல்லை.
எந்தக் குற்றமும் செய்யாத தன்பிள்ளை அநியாயமாக மரணித்துவிட்டாள் என்ற கவலை அவர்களை வாட்டி வதைக்கின்றது. தாயையும் தந்தையையும் சுற்றி எந்நேரமும் அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்கள் குழுமியிருப்பதையே காண முடிகின்றது.
இதேவேளை ரிசானாவின் மரணதண்டனை ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திடவேண்டும் என்ற தூய எண்ணத்தில் மூதூரில் ஒரு புதிய முயற்சியொன்று தொடங்கப்பட்டுள்ளது.
மூதூர் மஜ்லிஸ் சூரா, மூதூர் ஜம் இய்யதுல் உலமா, கதீப்மார் சம்மேளனம், தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மூதூர் ‘பீஸ் கெளஸ்’ ஒரு கையெழுத்து வேட்டையை அங்கு ஆரம்பித்துள்ளது.
இலங்கையிலிருந்து பணிப்பெண்களை பிள்ளைப் பராமரிப்புக்கும் கடினமான வேலைகளுக்கும் அனுப்புவதை அரசாங்கம் தடைசெய்ய வேண்டுமென கோரியே இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.
இது தொடர்பான மனுவை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான முயற்சியே இதுவென பீஸ் கெளஸின் தலைவர் அமீர் எஸ். ஹமீட் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க ரிசானா விவகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை எழுதும் போர்வையில் தவறான, மிகைப்படுத்திய செய்திகளை வெளியிடுவதாகவும், ஒலிபரப்புவதாகவும் குடும்ப அங்கத்தவர் ஒருவர் வருத்தம் வெளியிட்டார்.
அப்பாவியான, ஒன்றுமேயறியாத ரிசானாவின் தாயாரிடம் ஏதாவது விடயங்களை கேட்டு விட்டு அதனைத் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிடுவது வேதனையானது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செய்திகள் இடிந்து போயிருக்கும் ரிசானாவின் குடும்பத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என அவர் கவலையும் அச்சமும் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஷரிஆ அடிப்படையில் ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் அந்தச் சிறுமியை விசாரணை செய்த முறை பிழையானது என்ற கருத்தே இலங்கையர் பலரின் வேதனையாகவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் வாழும் எந்த ஒரு பெண்ணும் இந்தச் சம்பவத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
அத்துடன் சவூதி அதிகாரிகள் மீதும் ரிசானாவின் வீட்டு எஜமானியின் மீதும் இலங்கை மக்களின் கோபக் கனல் குறைந்ததாகத் தெரியவில்லை.
மொழி தெரியாத ஒரு பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு பொறுப் பற்ற விதத்தில் நடந்துகொண்ட அந்த அரபுப் பெண், இறுதிவரை தனது அடம்பிடிப்பை கைவிடாது மன்னிப்பு வழங்காதிருந்தமை அந்தப் பெண்ணின் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்து வதாகவே பெண்கள் கூறுகின்றனர்.
ரிசானாவின் மரண தண்டனைக்குப் பின்னர் இஸ்லாமிய ஷரிஆவை கொச்சைப்படுத்தும் முயற்சிகளில் மேற்குலக ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குலகத்தின் உலக தமிழ் வானொலி யொன்று ஷரீஆ சட்டம் தொடர்பில் இஸ்லாமிய மதப் பெரியார்களின் முரண்பட்ட கருத்துக்களை மாறி மாறி ஒலிபரப்பி ஷரீஆ சட்டத்தை ‘பிழையான ஒரு கோட்பாடு’ என சித்தரிக்க முற்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை இவ்விதமிருக்க, ரிசானாவின் மரணத்தின் பின்னர் அவரின் பெயரால் நிதியங்கள் உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் எந்த ஒரு திட்டமும் சுயநல நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாதென்பதில் மூதூர் மக்கள் உறுதியாக நிற்கின்றனர்.
அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ரிசானாவின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நன்றியுணர்வும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.