மன்னார், வவுனியா: வெள்ளம் வடிகிறது
நலன்புரி நிலையங்களில் இருந்தோர் வீடு திரும்புகின்றனர்
147 தற்காலிக நிலையங்கள் மூடப்பட்டன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தவர்களில் பெரும் பகுதியினர் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி 10795 குடும்பங்களைச் சேர்ந்த 38681 பேர் 240 தற்காலிக நலன்புரி நிலையங்களில் நேற்று முன்தினம் (31ம் திகதி) காலையாகும் போது தங்கி இருந்தனர். ஆனால் நேற்று முதலாம் திகதி மாலையாகும் போது 4153 குடும்பங்களைச் சேர்ந்த 14616 பேர் 93 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தனர்.
இதன்படி 6642 குடும்பங்களைச் சேர்ந்த 24,065 பேர் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இதன் காரணத்தினால் 147 தற்காலிக நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ள நீர் தொடர்ந்தும் வடிந்து வருவதுடன் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருந்தவர்களும் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தற்போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களில்தான் அதிகளவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 35 நலன்புரி நிலையங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 நலன்புரி நிலையங்களிலும் இவர்கள் தங்கியுள்ளனர் என்றார்.