நடந்தது என்ன - ரிஸானா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் கிராமத்தைச் சேர்ந்த 'ரிஸானா' வறுமையான சூழல் காரணமாக சவுதியில் வீட்டு வேலைக்காக செல்கிறாள். அவள் வாழ்ந்த வீட்டை பார்க்கும் போதே 'ரிஸானா'வின் வறுமை எப்படிப்பட்டது என்பதை கணித்து விடலாம். அந்த வீட்டில்தான் இரண்டு சகோதிரிகள், ஒரு சகோதரன் மற்றும் பெற்றோர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் காட்டில் விறகு பொறுக்கி விற்று, அதில் கிடைக்கும் பணத்தை அவள் அப்பா வீட்டுக்கு கொண்டு வந்தால்தான் அன்றைக்கு எல்லோருக்கும் ஒருவேளை உணவு. பல வேளை வெறும் சோற்றை மட்டும் சாப்பிட்டு ருசியை மறந்த குடும்பமாகவே அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில் 'ரிஸானா'வின் கல்வி தகுதி சராசரி ஏழைப் பெண்களின் படிப்பைப் போலவே வசதியற்ற காரணத்தினால் சிறுவயதிலேயே முடிந்துவிட்டது. தாய்மொழி தமிழைத் தவிர அவளுக்கு வேறு மொழி எதுவும் தெரியவில்லை. 17-வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். வீட்டில் கொடிய வறுமை. 'ரிஸானா'வுக்கு திருமணம் வேறு செய்தாக வேண்டும். சீதனம் கொடுத்தால் தான் திருமணம். தற்போதைக்கு அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத குடும்பச்சூழலில் வறுமை. முதலில் தங்கைளுக்கும், தம்பி, அப்பா, அம்மாவுக்கும் நல்ல சாப்பாடு, துணிமணி இருந்தால்கூட போதும். சகோதரர்களையும் படிக்க வைக்க வேண்டும். 'ரிஸானா'வின் அடிப்படை தேவைகளே அவ்வளவுதான். அத்தனையும் கிடைக்க வேண்டுமானால் அவளும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அப்போதுதான் சவுதியில் பணிப்பெண் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கேள்விப்பட்டு வேலைக்கு செல்ல முயற்சி எடுக்கிறாள் ரிஸானா. 18-வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக செல்ல அனுமதி இல்லை என்பதால் 02-02-1988 அன்று பிறந்த தேதியை 'ஏஜெண்ட் அஜிர்தீன்' என்பவர் உட்பட மேலும் இருவர் கூட்டு மோசடியில் 02-02-1982 என்று 4-வயது அதிகப்படுத்தி போலி சான்றிதழ்கள் உருவாக்கி எப்படியோ அனுப்பிவிட்டார்கள். 2005-இல் ஏப்ரல் 1-அன்று 'ரிஸானா' சவுதிக்கு செல்கிறாள். சவுதியில் பத்து உறுப்பினர்கள் கொண்ட வீட்டில் வேலை. என்ன வேலை? ஏது வேலை? என்று இல்லை. கூப்பிட்ட நேரத்திற்கெல்லாம் ஓட வேண்டும். சொல்லும் வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அப்படித்தான் அவளும் வேலை செய்து கொண்டிருந்தாள். வீட்டு எஜமானியின் 4-மாதக் குழந்தைக்கும் அவள்தான் பாலூட்டினாள்; கக்கா துடைத்தாள்; தூங்க வைத்தாள்; வீட்டை சுத்தம் செய்தாள்; துணிகளை துவைத்தாள்; பாத்திரங்களை கழுவினாள்... இப்படி சவுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்த ஒன்றரை மாதங்களிலேயே 'எஜமானியின் குழந்தையை கொன்றுவிட்டாள்' என்று கைது செய்யப்பட்டு 'அல் த்வாத்மி' என்ற சவுதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள். 1 வருடமாக நடைப்பெற்ற விசாரணைக்கு பின் 2006-இல் குழந்தையை கொலை செய்ததற்காக மரண தண்டனை கொடுக்கப்படுகிறது ரிஸானாவுக்கு. அப்போதுதான் வழக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும் உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகி கண்டனங்கள் வர ஆரம்பித்தன. 'சிறுவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க மாட்டோம்' என்று சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சவுதி தற்போது உடன்படிக்கையை மீறுகிறது என்று ஐ.நா கண்டனம் செய்தது. தீர்ப்பு கொடுக்கப்பட்ட 3 மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது 'ஷரீஆ' சட்டத்தின் விதிமுறை. ஆனால் வெளிநாடுகளின் கண்டனங்களால் ரிஸானாவுக்கு கொடுக்கப்பட இருந்த மரணதண்டனை 7 வருடங்களாக தாமதமான நிலையிலேயே இருந்தன. சவுதி இணையதளங்களில் மதவாதிகள் ரிஸானாவின் மரணதண்டனை தாமதமாக தள்ளிக் கொண்டே செல்வது குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர். 'சவுதி குழந்தையின் உயிருக்கு மதிப்பில்லையா? 'ஷரீஆ' சட்டத்திற்கு மதிப்பில்லையா? வெளிநாட்டு பெண்ணுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது நாட்டு பிரஜைகளுக்கு இல்லையா? சவுதி அரசு மேற்கத்திய நாடுகளுக்காக பயந்துக் கொண்டிருப்பதா?' என்று ஆவேசமாக கருத்துரையிட்டனர். இன்னும் சிலர் 'ஷரீஆ' சட்டத்தை செயலிழக்க வைப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என்று மனிதாபிமானத்திற்குள் மதச்சாரம் பூசினர். இருந்தாலும் சவுதியிலேயே ரிஸானாவுக்கு ஆதரவான குரல்களும் எழத்தான் செய்தன. காரணம் ஆதாரங்களில் உள்ள குளறுபடிகள்தான். நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக கூறும் அந்த குழந்தையின் தாய் சொல்கிறாள், "ரிசானாவுக்கும் எனக்கும் தகராறு வந்தது. குழந்தையை கொலை செய்துவிடுவேன் என்று ஏற்கனவே ரிஸாசான என்னை அச்சுறுத்தி இருந்தாள்." ஓர் ஏழைச் சிறுமி எந்த பாதுகாப்புமற்ற நாட்டில் அந்த நாட்டின் மொழிகூட அறியாதவள் வந்த சில நாட்களிலேயே எஜமானியின் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று எஜமானியிடமே மிரட்டியதாக கூறுவதின் உள்நோக்கம் ரிஹானாவுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்கிற பொய் குற்றச்சாட்டாகத்தான் பார்க்க முடிகிறது. ரிஸானா தரப்பு வாதங்கள் பெரும்பான்மையானவை வெளியே வரவில்லை. உலக சமூக அமைப்புகளின் கண்டனத்திற்கு பிறகே ரிஸானாவின் தன்னிலை விளக்கம் 30.01.2007-இல் 'அல் த்வாத்மி' சிறைச்சாலையில் இருந்து வெளிவந்தது. "சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது மூக்கில் இருந்து பால் வெளியேறியதாகவும் அதனால் தொண்டையை தடவி கொடுத்தேன். அல்லாவின் மீது ஆணையாக நான் குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை என்கிறாள் ரிஸானா. ஆனால், எஜமானி அவளை செருப்பால் அடித்து மூக்கில் இருந்து இரத்தம் வெளியேற போலிசில் ஒப்படைத்ததாக சுட்டிக்காட்டுகிறாள். அங்குதான் அவள் ஏதோ எழுதி இருந்த பேப்பரில் கையெழுத்து போடும்படியும், போடாவிட்டால் மின்சாரத்தை உடலில் பாயச்சுவோம் என்றும் சவுதி போலிஸ் மிரட்டியதாலும் கையெழுத்திட்டதாக குறிப்பிடுகிறாள். இத்தனை தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் 17 வயது சிறுமி மீது அரசு திணிப்பது என்ன உள்நோக்கம் கொண்டது என்பதை இஸ்லாமியர்களால்கூட உணர்ந்து கொள்ள முடியும். அதன் விளைவாகத்தான் ரிஸானாவுக்கு கிடைத்த தீர்ப்புக்கு எதிராக சவுதியிலும் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளாக வந்தன. இது தொடர்பாக இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பும் கண்டன ஆர்பாட்டம் நடத்தின. பயங்கரவாத ராஜபட்சேவின் சிங்கள அரசு ஓரளவுக்கு மட்டுமே ரிஸானாவுக்காக சவுதியிடம் மீட்பு கோரிக்கை வைத்தன. 2007 லேயே ரிஸானாவின் வழக்குக்கு மேற்கத்தியர்கள் கண்டன குரல் எழுப்பும் போது சவுதியில் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள் 'ஷரீஆ' சட்டத்தை அமுல்படுத்துவதில் தடை செய்யும் பொருட்டு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக கருதினர். 'ஷரீஆ' சட்டத்தின் நரபலி ரிஹானா என்பதில் தீவிரமாக இருந்தனர் சவுதி மதவாதிகள். 'அல்லாவின் ஆணை' என்று அவர்களின் அராஜகத்தை நியாயப்படுத்தினர். ஏற்கனவே இஸ்லாமியர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று எழுதிக் கொண்டிருந்த ஊடகங்கள் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை எழுப்பின. உள்நோக்கம் எப்படியாக இருப்பினும் ரிஸானாவை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தில் ஒருமித்திருந்தனர். ரிஸானாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்லாம் மதகுருமார்களில் பலர் அநீதி நடந்திருக்கிறது என்பதை அறிந்தும் மௌனமாக இருந்தனர். உலகிலுள்ள எல்லா மதங்களும், மதபோதகர்களும் அன்பையே வலியுறுத்தி தமது சமகால சம்பவங்களை அணுகினார்கள். இஸ்லாமும் அன்பை வலியுறுத்தியே குரானை உருவாக்கியது. முகமது நபியின் தத்துவங்கள் அனைத்துமே அவரது பழங்குடிச் சமூகத்தில் சூழ்நிலைக் காரணங்களால் அடிமைமுறைச் சமூகமுறையை மாற்றியமைத்த ஓர் தத்துவ இயலில் கருத்தாக்கம் கொண்டது. மனிதர்களுக்குள் சமத்துவத்தை வலியுறுத்தியது. அதனால்தான் கடவுள் மறுப்பை பேசிய பெரியார், 'இந்து மத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட மக்களை நோக்கி, உங்கள் இழிவு ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மதத்தில் இணைந்து கொள்ளுங்கள்' என்றார். அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதையே கூறினார். "சமத்துவத்திற்காக இஸ்லாம் மதத்தை ஆதரித்த பெரியார் 1930-இல் அம்பேத்கர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது குறித்து கருத்து கூறியபோது பெரியார், அம்பேத்கரை இஸ்லாத்தில் சேர வேண்டாம் என்றார். அதற்கு பெரியார் குறிப்பிட்ட காரணம், இஸ்லாத்தில் மவுலானார் சொல்கிற படித்தான் கேட்க வேண்டும். மதச் சீர்திருத்தம் எதுவும் செய்துவிட அனுமதி இல்லாத மதம் (Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் (சிறை) போலத்தான் இருக்கும்" என்று தந்தி அடித்தார். இன்றும் சவுதியில் ரிஸானா மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போது தீர்ப்பு சரியா? பிழையா? என்று விவாதிக்கலாம். ஆனால் இஸ்லாத்தின் சட்டங்களை விமர்சித்து தாக்கும் அளவுக்கு போகக்கூடாது என்று மதவாதிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கருணை, தயாளம் (இஹ்ஸான்), மன்னிப்பு (அப்ஃவு) என்கிற மூன்று அறநெறி கோட்பாடுகளின் முதன்மையில் இஸ்லாம் பழங்குடி சமூதாயத்தில் கட்டமைக்கப்பட்டது. "இறைவன் கருணையாளன், அளவற்ற அன்பாளன்" என்றே அல்குர்ஆனின் முதல் வசனமே தொடங்குகின்றது. உலகிலுள்ள எல்லா மதங்களும் மத போதகர்களும் அன்பையே வலியுறுத்திப் பேசியுள்ளார்கள். அதுப்போலவே இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது. அல்லாஹ்வை விசுவாசிக்கும் முஸ்லிம்கள் அந்தப் பண்பையே தமது சமூக அரசியல், சட்ட நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும். ஆனால் மன்னிப்பையும் அன்பையும் போதிக்கும் எந்த மதச் சட்டங்களும் அந்தந்த மதத்திற்குரிய மனிதர்களை நெறிப்படுத்தியதில்லை. கிருஸ்தவமாக இருந்தாலும் இந்து, பௌத்தமாக இருந்தாலும் இன்றைய காலத்தில் மதங்கள் தீவிரவாத வன்மங்களுடனே திரிகின்றன. ஆனால், மற்ற மதங்களில் இல்லாத கடும் குற்றச்சாட்டை இஸ்லாம் எதிர்கொள்வதற்கு முக்கிய காரணங்கள் 'ஷரீஆ' சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை தருகிறோம் என கையை வெட்டுவது, தலையை வெட்டுவது என்று கடுமையான தண்டனைகள் மக்களாட்சி ஜனநாயகவாத சமூகத்தில் உள்ள மக்களை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன. இஸ்லாம் சட்டதிட்டங்கள் பல்வேறு முறையிகளில் இஸ்லாம் நாடுகளில் செயல் திட்டத்தில் உள்ளது. பல்வேறு ஐனநாயக நாடுகளில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியர்களிடம் 'ஷரீஆ' சட்டப்படி தண்டனை கொடுக்கும் விதிமுறைகள் இல்லை. அதனால்தான் ஜனநாயக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் கூட ஷரீஆ தண்டனைகள் நிறைவேற்றும் போது தங்கள் இஸ்லாம் தண்டனைகள் குறித்து இஸ்லாமியர்களிடம் இருந்தே அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இஸ்லாம் குறித்த விமர்சனங்களும் வருகின்றன. பொத்தாம் பொதுவாக எல்லா இஸ்லாமியர்களும் ஷரீஆ சட்டத்தின் ஆதரவாளர்களாக இருக்கவில்லை. அல்லாவின் மன்னிப்பு கோட்பாட்டை முன்வைத்து கண்டனம் செய்கின்றனர். 'குர்ஆன்' இவ்வாறு சொல்கிறது: "இறை நம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்த சுதந்திரமான மனிதனும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும் கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமும் பழிவாங்கலாம். கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் சகோதரனால் சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்.” (2.178) ஒரு கருத்தியல் மனிதச் சமுதாயத்தின் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் அமைப்பு மாறுதலுக்கு ஏற்ப எப்படி மாறுதலுக்கு உள்ளாகிறது என்பதை பொறுத்து சமுதாயத்தின் மேன்மை இருக்கிறது. இஸ்லாத்தில் பழங்குடிச் சமூகத்தில் மக்களை நெறிப்படுத்துவதற்காக முகமதுநபி குடி, சூது, திருட்டு, கொலை, பாலியல் வன்முறை போன்ற பல சமூக சீர்கேடுகளை எதிர்த்து உருவாக்கிய 'குர்ஆன்' சட்ட திட்டங்களும், தண்டனை முறைகளும் பற்றிய கருத்தியல் நிலவுடமைச் சமூகத்தில் மாறுபட்டிருக்கிறது. நிலவுடமைச் சமூகத்தின் கருத்தாக்கம் தற்போதைய ஜனநாயக சமூகத்திற்கு ஏற்றார் போல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதை இஸ்லாத்தில் உள்ள மன்னர் ஆட்சி முறை ஏற்க மறுக்கிறது. ஒருவேளை 'ஷரீஆ' மாற்றுதல்களுக்கு உட்படுத்தினால் தங்கள் ஆளுமையை இழந்துவிடக் கூடும் என்கிற அச்சமே மன்னர் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அதனால்தான் ஹீதூத் என்னும் குற்றங்களுக்கான தண்டனை முறைகளை செயல்படுத்த தயங்குகிறது. இஸ்லாத்தில் தலிபானிஸம் உருவாக்கத்திற்கு காரணமான மேற்கத்திய நாடுகள் அராபிய எண்ணெய் வளங்களை ஆள்வதற்கான உருவாக்கப்பட்ட தீவிரவாதம். ஷரீஆ சட்டதிட்டங்கள் இஸ்லாத்தில் ஜனநாயக ஆட்சி முறையை ஏற்க மறுத்த மன்னராட்சியின் நிலப்பிரவுத்துவ ஆட்சியாளர்களால் அதாவது முதலாளித்துவ ஆதிக்க உணர்வோடு மதம் சார்ந்த திணிப்புக்குள் உட்படுத்தும் சட்டமுறைமை தண்டனைகள் இன்று பெரும்பான்மை மக்களுக்கு அச்சறுத்தும் தண்டனை முறையாக தொடருவதால்தான் இஸ்லாத் தீவிரவாதம் என்றும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும் பொதுபுத்தி விமர்னத்தை வளர்தெடுக்க சவுதி போன்ற நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களே காரணமாகிப் போகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்' இஸ்லாத்தில் இருவேறு கருத்தியல் பிளவு உருவாக காரணமானார். சவுதி போன்ற நாடுகளில் 'தலிபானிஸம்' செய்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு இவரைப் போன்றவர்களே காரணம். அதனால்தான் ரிஸானா போன்ற ஏழைப் பெண்களுக்கு அநிதியான தண்டனைகளை நியாயப்படுத்த முடிகிறது. ஜனவரி 09.01.2013இல் காலை ரிஸானா கொல்லப்பட்டாள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் காட்சி உலகம் முழுவதையும் அதிர வைத்தது. ரிஸானாவின் தாய் மகள் கொல்லப்பட்டதை உண்மை இல்லை என நம்ப மறுத்தார். அவளுடைய சகோதரர்கள் கதறி அழுதார்கள். அவள் கிராமமே சோகத்தில் மூழ்கியது. ரிஸானாவின் உடல் பெற்றோரிடம் கூட ஒப்படைக்கவில்லை. சவுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவளுடைய கடைசி ஆசையின்படி சிறையில் வேலை செய்த பங்குக்கு கிடைத்த 500 றியால் யை அவளுடைய குடும்பத்திற்கு அனுப்பியது. இனவாத பயங்கரவாத சிங்கள அரசு பாராளுமன்றத்தில் 1 நிமிட மவுன அஞ்சலியுடன் முடித்துக் கொண்டது. ரிஸானாவின் உடலை பெறுவதற்காக முயற்சியில்கூட ஈடுபடவில்லை. ஷரியா சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 'ரிஸானா'வுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள்தனம் என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார். 'ரிஸானா' மரணத்திற்கு முன் எழுதிய கடைசி கடிதத்தில் குறிப்பிடுகிறாள்: "முஸ்லிம் பெண்கள் மஹ்ரம் இல்லது வெளிநாடு செல்லக் கூடாது என்று என் போன்ற சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்ய பலநூறு அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள்இ அமைப்புக்கள் இருந்தனஇ அனால் ஆண்கள் பெண்களை "கவ்வாமூன்" களாக இருந்து எவ்வாறு வாழ வைத்திருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லவும் அமுல் படுத்தவும் அவர்கள் முன் வந்திருந்தால் பல திரைமறைவில் பல ஆயிரம் சமூக அநீதிகளுக்கு என் போன்றவர்கள் அட்பட்டிருக்க மாட்டார்கள்." ரிஹானாவிற்கு இஸ்லாமிய மதவாதிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.