2012இல் இலங்கையின் பொருளாதார நிலை: ஒரு பார்வை


இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன.
நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக நிர்மாணத்துறை, விவசாயத்துறை, தொலைத் தொடர்பாடல்கள் துறை போன்றன அமைந்துள்ளன. 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தை பொறுத்த மட்டில், நாட்டின் மக்களை போன்று, பொருளாதாரத்துக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு அமைந்திருந்தது. பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டிருந்தது. 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த இலங்கை ரூபாவின் பெறுமதியை மிதக்க விடும் கொள்கைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலையிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலையை அரசு எதிர்கொண்டது.
இதன் காரணமாக எரிபொருட்களுடன் தொடர்புடைய இதர துறைகளும் தமது கட்டணங்களை மீளமைக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டதுடன், மார்ச் மாதமளவில் மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்தது.
இவ்வாறு விலை அதிகரிப்பு நிலை ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமிருந்தன. உலகப்புகழ் பெற்ற ஷங்கிரிலா ஹோட்டல் நிர்மாணப்பணிகள் கொழும்பில் ஆரம்பமாகின. இதற்காக மொத்த முதலீடாக 408 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீதான வரியை அரசு 5 முதல் 50 வீதம் வரை உயர்த்தியிருந்தது. இதன் காரணமாக இலகு ரக மோட்டார் வாகனங்கள் விலைகள் பெருமளவு அதிகரித்திருந்ததுடன், மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன.
தரம் குறைந்த எரிபொருள்கள் இறக்குமதியின் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. அத்துடன், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 2000இற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு நட்ட ஈடு வழங்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட வாகனமொன்றுக்கு ரூ.50,000 வரை நட்ட ஈட்டை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருந்த நிலையில், ஈரானிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், ஈரானுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அமெரிக்க பொருளாதார தடை விதித்திருந்தது. இதன் காரணமாக மானிய விலை அடிப்படையில் இலங்கை ஈரானிடமிருந்து பெற்று வந்த மசகு எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்தி, மாற்று நாடுகளை நாட வேண்டிய நிலை எற்பட்டது. இதன் போது, மேற்படி தரம் குறைவான பெற்றோல் இறக்குமதி இடம்பெற்றதாக அரச தரப்பு காரணத்தையும் குறிப்பிட்டிருந்தது.
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மேற்படியான பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட அதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக நாட்டின் மொத்த தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக தேயிலையின் விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டு, உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தனர்.
வெளிநாட்டு சூழ்நிலை பாதகமாக அமைந்த நிலையில், உள்நாட்டில் காலநிலையும், 2012ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் வரட்சியானதாகவே அமைந்திருந்தது. இதன் காரணமாக நாட்டின் விவசாயத்துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. தேயிலை உற்பத்தி, நெல் உற்பத்தி, மரக்கறிச் செய்கை என பல விவசாய பிரிவுகள் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன.
நாட்டில் நிலவிய வரட்சியின் காரணமாக மின்சார உற்பத்தியையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலும் தொடர்ச்சியாக கோளாறுகள் ஏற்பட்ட வண்ணமிருக்க, நாட்டின் மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் (கொழும்பு நகரை தவிர) அனைத்து பகுதிகளிலும் மின்சாரத் தடையை அமுல்படுத்தியிருந்தது. சுமார் 1 மாத காலம் வரை இந்த மின்சார தடை சுழற்சி முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறந்த வெளிப்படையான விபரங்களை வழங்கும் வகையில், புதிய சுட்டெண் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எஸ்அன்ட்பி லங்கா சுட்டெண் என பெயரிடப்பட்ட இந்த விலைச்சுட்டெண் பங்கு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மிலங்க விலைச்சுட்டெண்ணின் மீதான ஆர்வம் குறைவடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது. கடந்த ஜூலை மாத பிற்பகுதியில் இந்த சுட்டி அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2007ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – சர்வதேச வங்கிகளுடன் மேற்கொண்டிருந்த ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கல் முறைமைக்கமைவான எரிபொருள் கொள்வனவு முறைக்கமைய கட்டணங்களை செலுத்த மறுத்ததன் காரணமாக குறித்த வங்கிகள் சர்வதேச நீதிமன்றங்களில் வழங்குத் தொடர்ந்திருந்தன. இதன் காரணமாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழக்கின் மூலம் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நட்ட ஈடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாட்டின் சுற்றுலாத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, ஆண்டின் 950,000ஆவது சுற்றாலப் பயணி இலங்கையை வந்தடைந்தார். இதன் மூலம் சுற்றுலாத்துறையில் 2012ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப்பயணிகள் வருகைக்கான இலக்கை இலங்கை எய்தியிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது. இந்த எண்ணிக்கை டிசெம்பர் 30ஆம் திகதியில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளாக அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் வரிகளை உள்ளீர்க்கும் அரசின் நடவடிக்கை அவ்வப்போது நடந்தேறியிருந்தது. இதன் விளைவாக பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையை எதிர்நோக்கியிருந்தனர்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பொருளாதார நிலையை முன்னேற்றும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. இந்த நிலையில், 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் பிரதம நீதியரசர் மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கையானது வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கை மீது காணப்படும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் சட்டம் மற்றும் பொருளாதார கொள்கைகள் போன்றவற்றிலும் நம்பிக்கையின்மையை தோற்றுவித்துள்ளது.
வடக்கு, கிழக்கை பொறுத்தமட்டில் வீதி அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று பூர்த்தியடைந்துள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போதிலும், தெற்கு பகுதியிலிருந்து வருகை தரும் பெரும்பான்மை இனத்தவரின் தவறான வர்த்தக செயற்பாடுகள் காரணமாக அச்சத்துடனேயே செயற்பட வேண்டிய நிலை காணப்படுகிறது.
அத்துடன் வடபிராந்திய விவசாய உற்பத்திகளுக்கு முறையான சந்தை வாய்ப்பின்மையும், தம்புள்ளை போன்ற அரச மேற்பார்வையின் கீழ் இயங்கும் அபிவிருத்தியான பொருளாதார வர்த்தக மையமொன்றின் தேவையும் இந்த பகுதிகளில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலரும் 2013ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு குறைந்த வாழக்கைச் செலவுடன் கூடிய அதிக வியாபார வாய்ப்புகள் என்பதாக அமைந்துள்ள நிலையில், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வது, எரிபொருட்களின் விலையை சீராக பேணுவது போன்றன அரசின் சவால்களாக அமைந்திருக்கும் என்பது பல பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக அமைந்துள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.