பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!


வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களை தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவரும் நிலையில் வெள்ளப் பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என மக்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கடந்தவாரம் முதல் பெய்துவரும் கன மழையினால் முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாரிய குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரித்திருக்கின்றது. இந்த இரு மாவட்டங்களிலும் சுமார் 16 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்டச் செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுடைய முழுமையான விபரங்கள் இன்னமும் சேகரிக்கப்படவில்லை என மாவட்ட செயலகங்கள் தெரிவித்திருக்கின்றன.
எனினும் இவ்விரு மாவட்டங்களிலும் சுமார் 2500 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என மாவட்டச் செயலகங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன. இதேபோல் அடுத்த சில தினங்களில் வெள்ளப் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படும் நிலையில் இன்னும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.
இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. எனினும் பெரியளவில் இடப்பெயர்வுகள் எவையும் இடம்பெறவில்லை.


வடக்கில் எடுக்கப்ப்ட்ட புகைப்படங்கள்



இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.