வெள்ளத்தில் மிதக்கும் கண்ணிவெடிகள் மீட்பு!
மன்னார் மாவட்டத்தின் நொச்சிகுளம் வீதியில் வெள்ளத்தில் மிதந்து வந்த கண்ணிவெடிகள் இரண்டு மற்றும் கைக்குண்டுகள் இரண்டும் படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், வவுனியாவில் குளங்கள் நிரம்பி, பெருந்தெருக்களில் கரைபுரண்டு ஒடுவதால் மண் படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போகின்றன.
இந்நிலையில், நொச்சிக்குளம் வீதியில் உள்ள மண்படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போனதையடுத்து, புதையுண்டு கிடந்த வெடிப்பொருட்கள் வெளியில் தெரிந்துள்ளன.
இப்பகுதி மக்கள் இதுகுறித்து படையினருக்கு அறிவித்துள்ளனர். படையினர் அந்த வெடிப்பொருட்களை மீட்டு, செயலிழக்க செய்துள்ளனர்.
இவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் 15 கிலோகிராம் என்று படையினர் தெரிவித்துள்ளனர். இவை விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில், 35 குளக்கட்டுகள் உடைப்புக்குள்ளாகியுள்ளன. இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.