வவுனியா கைதிகள் குறித்து அரச அதிகாரிகள் பொறுமையுடன் செயற்பட வேண்டும்
வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள துரதிஷ்ட நிலை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் என்ற ரீதியிலும் நான் கவலை அடைகின்றேன். இந்த நிலைமையை சீர்ப்படுத்த மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும். இந்த சிறைக்கைதிகளின் மனோநிலை தொடர்பில் அதிகாரிகளின் கவனம் திரும்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இக் கைதிகள் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றுவது குறித்தும் அது தொடர்பாக அக்கைதிகளை தெளிவுபடுத்தவும், அது குறித்து அறிவிக்கவும் அவசியம் என தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லாதிருந்தால் அக்கைதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சிறந்ததாகும்.விசேடமாக தேசிய பிரச்சினைக்கு சிறந்த தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இச் சந்தர்ப்பத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கிரமம் கிரமமாக புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் நிலையிலும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் மீது கருணை உள்ளத்துடன் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதி மீதும் மனிதாபிமானமற்ற வகையில் நடவடிக்கை எடுப்பதை பௌத்த சமூகம் என்ற வகையில் எம்மால் அனுமதிக்க முடியாது. எமது சிறைச்சாலை எண்ணக்கருவான 'சிறைக்கைதிகளும் மனிதர்கள்' என்பது வெறும் சொற்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது, செயற்பாட்டிலும் காண்பிக்க வேண்டும்.கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆவேசப்பட்டு எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது.இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து சிறைக்கைதிகளினதும் பாதுகாப்பு, சுகாதாரம், உரிமை என்பனவற்றை பாதுகாக்க, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மனித உரிமைகள் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் என்ற ரீதியில் நான் எந்நிலையிலும் முன்நிற்பேன். வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சீர்ப்படுத்தும் முயற்சிகளில் மகாநாயக்கர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்களினது தலையீடுகள் அவசியம் என வலியுறுத்துகின்றேன்.கைதிகளின் ஆவேச நிலையை எம்மால் அனுமதிக்க முடியாத போதிலும், அது தொடர்பில் சமாதான, ருணை கண்ணோட்டத்துடன் புத்திசாதுரியமான தீர்மானங்களை பொறுப்புடன் அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும். எமது நாட்டின் நற்பெயரை பாதுகாக்கவும், தேசிய நல்லிணக்கத்தை மூவின மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தச் சந்தர்ப்பம் முக்கியம் வாய்ந்ததாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
By:-yasi(tw)