அபிவிருத்தி தவிர்ந்த ஏனைய கூட்டங்களுக்கு கூட்மைப்பை அழைக்கத் தேவையில்லை : றிஷாட் பதியுதீன்
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோருடன் வவுனியா பிரதேசசபை தலைவர் நகரசபை உறுப்பினர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலாளரிடம் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ ஆகியோர் வவுனியா நகரசபைத் தலைவருக்கு ஏன் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்றும் தங்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்றும் முறையிட்டனர். பிரதேச செயலாளர் தான் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார். ஆனால் நகரசபைத் தலைவருக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் றிஷாட் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தைத் தவிர ஏனைய கூட்டங்களுக்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது ஏனைய கட்சியினரையோ அழைக்க வேண்டியதில்லை என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆயினும் நான் இப்பிரதேச அபிவிருத்தியில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து அழைப்பு விடுத்தேன் என்றும் நகரசபையின் தலைவர் டியு குணசேகராவின் கையாளாகவே செயற்படுகின்றார் என்றும் கூறியதுடன் இனிமேல் நான் தலைமைதாங்கும் கூட்டங்களுக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
வன்னி மாவட்டத்தில் தற்பொழுது மீள்குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே மீள்குடியேறிய மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எமது மக்கள் எம்மிடம் ஏராளமான முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் வவுனியாவில் முகாமிட்டிருப்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக பிரதேச செயலாளர் கூறுகிறார்.
அவசர முடிவெடுத்துக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதால் உரிய முறையில் அழைப்புக்கள் அனுப்பப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டியதற்கு எம்மைக் குழப்பம் விளைவிப்பவர்கள் என்று அமைச்சர் கூறுகிறார்.
நாம் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் நகரசபை தொடர்பான விடயங்களை நகரசபைத் தலைவர் கலந்து கொண்டு தெரிவிப்பதே பொறுத்தமானது என்பதன் அடிப்படையிலும்தான் ஏன் நகரசபைத் தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கேட்டோம். இதனைக் கேட்டதற்கு நாம் குழப்பம் விளைவிப்பவர்கள் என்று அமைச்சர் கூறுகிறார். அமைச்சரின் இந்தக்கூற்று வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வன்னி மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களினதும் மாவட்டங்களினதும் அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கானது. எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லும் உரிமை எமக்கிருக்கிறது. அதற்குத்தான் மக்கள் எமக்கு ஆணை தந்துள்ளனர். ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் வழங்கியுள்ள ஆணையைப் போன்றே எமது மக்கள் எமக்கும் ஆணை வழங்கியுள்ளனர். எம்மைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. அமைச்சரின் இச்செயல் அவரது அரசியல் நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தென்பகுதி மக்கள் எப்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அதனைப்போன்றே எமது மக்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், அபிவிருத்தி விடயம் தொடர்பாகக் கூட்டப்படும் கூட்டங்களுக்கே அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று கூறுபவர்கள் எப்படி எங்களுடன் பேசி நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டுவரப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
ஜனநாயகப் பண்புகளை மதிக்கத் தெரியாதவர்களிடம் முறையான மீள்குடியேற்றம், நிரந்தர அபிவிருத்தி, நிரந்தரமான அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?
நெடுங்கேணியில் ஹூனைஸ்பாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஆக வன்னி மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி இன்று தாங்கள்தான் வன்னி மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் போல் இவர்கள் செயல்படுகின்றனர்.
நானாட்டான், சோபாலபுளியங்குளம் போன்ற பகுதிகளில் அமைச்சரின் பாரபட்சமான அணுகுமுறையால் சமூகங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவர்களது இத்தகைய நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
இத்தகையோர்களது கையில் பொறுப்புக்களைக் கொடுத்திருக்கும் அரசாங்கத்தினால் இந்நாட்டில் நல்லிணக்கதையும் சமாதானத்தையும் எப்படிக் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் வினோ நோகராதலிங்கமும் கூட்டங்களுக்கு எங்களுக்கு முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களும் கலந்துகொண்டு தங்களது கிராமத்தின் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
BY:-yasi