வடக்கு கிழக்கினை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்
வடக்கு மாகாணசபைக்கு முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலைக்குச் சென்ற அவர், முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர், காணி விவகாரங்கள், முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள், இடங்கள் அழிக்கப்படும் விவகாரம், முஸ்லிம்களின எதிர்ப்பையும் மீறி அவர்களின் வழிபாட்டு இடத்தில் சிறிலங்கா படைகளின் தளம் அமைக்கப்படும் விவகாரம், சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சிங்களவர்களால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், கிழக்கில் அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்கத் தூதுவர் விசாரித்ததாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.