வடக்கில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர விஜயம்


அசாதாரண காலநிலை காரணமாக இடம்பெற்ற பாதிப்புகள் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரம் கூடவுள்ள அமைசரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், விளைச்சல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும் நட்டஈடுகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில், அசாதாரண காலநிலை காரணமாக 9 , 717 குடும்பங்களைச் சேர்ந்த 33 ,859 பேர் 195 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை பெற்றுக்கொடுப்பதற்கு மேலும் 100 மில்லியன் ரூபா நாளை வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கான உணவுப் பொருட்கள் பத்து லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்த உணவுத் தொகுதி அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அந்தந்த மாவட்டங்களின் வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மன்னார், நானாட்டான், முசலி, மடு மற்றும் மாந்தை பிரதேச செயலக பிரிவுகள் என்பன மிகவும் பாரதூரமாக பாதிப்படைந்தன.
இதனால் 4, 225 குடும்பங்களைச் சேர்ந்த 17, 339 பேர் பாதிக்கப்பட்டதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 1, 307 குடும்பங்கள் இன்னும் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
2ம் இணைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் விஜயம்
வடபகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் மகிந்த அமரவீர, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் கேட்டறிந்தார்.
இலங்கையின் வடக்கே மழையினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு வார காலத்திற்கு சமைத்த உணவு வழங்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
பொது இடங்களில் தஞ்சமடைந்திருந்தாலும், வீடுகளில் சமைக்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
சமைத்த உணவு வழங்கப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொருள் விநியோகத்தை மேலும் இரண்டு வராங்களுக்கு நீடிக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டிருக்கின்றார்.
வடபகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் மகிந்த அமரவீர, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும், அவர்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் எந்த வகையில் கிடைத்திருக்கினற்ன என்பது பற்றியும் கேட்டறிந்தபோதே இந்த உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், மழை வெள்ளம் காரணமாக 30 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான காலப்பகுதிக்குள் மழை வெள்ளம் காரணமாக நாடெங்கிலும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 204 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து ஆயிரத்து 988 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 11 ஆயிரத்து 302 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 191 பேர் 242 நிலையங்களில் தஞ்சமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது.
மழையினாலும் வௌள்த்தினாலும், இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். ஏழு பேருக்கு என்ன நடந்து என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியிருக்கின்றது.
தாழ்ந்த நிலப்பகுதிகளில் வீடுகளை அமைத்திருப்பவர்கள் வருடந்தோறும் மழைவெள்ளததினால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்களது குடியிருப்புக்களை அங்கிருந்து மாற்றி மேட்டுப்பாங்கான இடங்களில் காணிகளை வழங்கி குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றரர்.
தாழ்ந்த நிலப்பகுதிகளில் உள்ள காணிகளை, உரிமையாளர்கள் விவசாயத் தேவைக்கு மாததிரம் பயன்படுத்தலாம் என்றும்,அரசாங்கம் வழங்குகின்ற காணிகளில் வீடமைப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்குகின்ற ஒரு லட்ச ரூபா நிதியுதவியையும், வேறு வகையான உதவிகளைக் கொண்டும் அவர்கள் வீடுகளை அமைத்து குடியிருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சரின் இந்த ஏற்பாட்டை, பாதிக்கப்பட்ட மக்கள், கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட போதிலும், பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்து கட்டி தற்போது குடியிருக்கின்ற வீடுகளை உடைத்துவிட்டு புதிய வீடுகளை அமைசசு வழங்குகின்ற ஒரு லட்ச ரூபா நிதியுதவியில் கட்ட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மறிச்சுக்கட்டி, குஞ்சுக்குளம், சன்னார் போன்ற இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குரிய நிவாரண உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இனனும் உரிய முறையில், உரியஅளவில் வந்து சேரவில்லை என கூறியிருக்கின்றார்கள்.
இது பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜனாதிபதியும், அமைச்சர்கள், அதிகாரிகளும் நேரடியாகப் பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள் என்றும், இவ்வாறான உதவிகளுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும, பாதிக்க்பபட்ட மக்களுக்குரிய உதவிகளை வழங்காதிருக்கும் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.