வவுனியா நகரசபை தலைவரிடம் விளக்கம் கேட்டு மகஜர்! பதில் இல்லையேல் ஆர்ப்பாட்டம்: வவு.பொது அமைப்புக்கள்


வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும் அதற்கான விளக்கம் கேட்டு  வவுனியா பொது அமைப்புக்கள் இன்று வவு. நகரசபை தலைவரிடம் மகஜரொன்றினை கையளித்துள்ளன.
இந்நிலையில் குறித்த மகஜருக்கான விளக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் பொதுஅமைப்புக்களை அழைத்து வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி வவுனியா நகரசபைக்கு முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுமக்களுக்கு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து துண்டுபிரசுரம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா பொது அமைப்புக்கள் கடந்த 10.12.2012 அன்று வவுனியாவில் நடாத்திய கூட்டத்தின் பிரகாரம் நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் அதனுடைய வெளிப்படைத்தன்மைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் திருப்தியற்ற தன்மையும் காணப்படுகின்றது என ஆராயப்பட்டது.
இதன் நிமித்தம் நகரசபையிடம் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்கும் அதனூடாக மக்களுக்கு தெளிவுபடுத்தவும் தங்களிடம் நாம் கீழ் காணும் செயற்பாடுகள் தொடர்பில் சில விளக்கங்களை கோருகின்றோம்.
எனவே தாங்கள் இதற்கான விளக்கங்களை தரும் பட்சத்தில் நகரசபையினுடைய செயற்பாடுகள் மற்றும் சந்தேகங்களை மக்கள் நிவர்த்திக்க கூடியதாக இருக்கும் என எண்ணுகின்றோம்.
சீரான முறையில் நகரப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பாக (உ.ம்: வைரவ புளியங்குளம் பகுதியில் 3ஆம் ஒழுங்கையில் கடந்த 17 நாட்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை, பத்தினியார் மகிழங்குளம் பகுதிக்கு குப்பைகள் அகற்றும் செயற்பாடு இதுவரை நடைபெறாமை)
நகரசபைக்குட்பட்ட பல வீதிகளும் செப்பனிடப்படாமை (உ.ம்: முதலாம், இரண்டாம் குறுக்குத்தெரு, கந்தசாமி கோவில் வீதி, கதிரேசன் வீதி, வைத்தியசாலை முன் வீதி)
ஒவ்வொரு உறுப்பினருக்குமான ரூபா 25 இலட்சம் பெறுமதியான ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலுமான வெளிப்படைத்தன்மை. (உறுப்பினர்களின் வேலைத்திட்டங்களை மக்களுக்கு காட்சிப்படுத்தல், கேள்வி கோரல்களை தெளிவுபடுத்தல், ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்குமான பாதீடு காட்சிப்படுத்தல்)
பல கோடி ரூபா செலவில் கட்டி முடித்து ஆடம்பரமாக திறக்கப்பட்ட பூந்தோட்டம் எரியூட்டும் மயானம் இயங்கமை தொடர்பான விளக்கம்.
இந்திய அரசாங்கத்தால் வவுனியா நகரசபைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 5 பேரூந்துகளின் செயற்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் தரித்து நிற்றல்.
வரியிறுப்பாளர் சங்கத்தினால் மக்களின் நலன் கருதி நகரசபைக்கு அனுப்பப்பட்ட பல கடிதங்களில் ஒன்றிற்கு கூட பதிலளிக்காமை. (சுமார் 42 கடிதங்கள்)
கடை மாற்றம் தொடர்பாக பல கூட்டங்கள் நடைபெற்றும் எதுவித பலனுமின்றி வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் நிலைக்கு தீர்வு என்ன?
இக்கடிதம் தங்களுக்கு கிடைத்து எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் பொது அமைப்புக்களின் உறுப்பினர்களை அழைத்து தகுந்த விளக்கத்தை தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
தாங்கள் பதிலினை தர தவறும் பட்சத்தில் பொது அமைப்புக்களின் சார்பில் வவுனியா நகரசபைக்கு முன்னாக எதிர்வரும் 26.12.2012 புதன்கிழமை அமைதியான முறையில் நகரசபைக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.