புகையிரதத்தில் மோதி வயோதிபர் மரணம்
வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி வந்த புகையிரதம், மன்னார் வீதி காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையினைத் கடந்து செல்லும் போது 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரது உடல் பாகங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் சம்பவ இடத்தில் மதுப்போத்தல், தண்ணீர்ப் போத்தல், சாப்பாடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் உடற்பாகங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நபர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
By:-s.s.yasi