பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வவுனியா விஜயம்! மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடல்

வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நிலை குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா எலாஹி பலூஜி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் வவுனியா சாளம்பைக்குளம், தலைமன்னார் மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிகளில் உள்ள கிராமங்ளுக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தின் போது மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர்களான மொஹிதீன், லியாவுதீன் உட்பட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் உயர்ஸ்தானிகர் பேசுகையில் கூறியதாவது:

நான் இங்கு வருகைதந்து மீள்குடியேறியுள்ள மக்களது பிரச்சினைகளை தேவைகளை நேரில் பாரக்க முடிந்தது. மிகவும் கடினமான ஒரு அகதி வாழ்க்கையினை நீங்கள் வாழ்கின்றீர்கள் என்பதை அறிய முடிகின்றது. உங்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் எனக்கு தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளார்.

மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கும் உங்களது வாழ்வு விமோசனம் பெற பிரார்த்தனைகளை செய்வோம். அதேபோல் கொழும்புக்கு சென்றதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபகச மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் ஆகியோரை சந்தித்து உங்களது தேவைகள் குறித்து விளக்கமளித்து உதவிகளை பெற்றுத் தர முயற்சிகளை செய்யவுள்ளேன்.

நீங்கள் பெற்றுள்ள அமைச்சர றிசாத் பதியுதீன் மக்கள் பணியினை செய்யக் கூடிய தைரியம் கொண்டவர். நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை அதனை செய்ய கூடியவர் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.