வவுனியாவில் குடிவரவு குடியகல்வு காரியாலயம் திறப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் வவுனியா வெளிவட்ட வீதியில் 08.02.2012 புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வட பகுதியை சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் உட்பட கொழும்பின் தலைமைக் காரியாலயங்களிலேயே இதுவரை காலமும் தமக்கான கடவுச்சீட்டுக்கள் மற்றும் குடியகல்வின் போதான பிரச்சினைகள் தொடர்பில் அணுகிவந்த நிலையில் தற்போது வவுனியாவில் பிராந்திய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வலுவலகத்தின் ஊடாக 14 நாட்களில் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் கடவுச்சீட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை 6 நாட்களுக்குள் செயற்படுத்திக்கொள்ளவும் முடியும் என தெரிவித்த வவுனியா அலுவலகத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் பி.எச்.என்.ஜயசிங்க, கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து அலுவல்களையும் இப்பிராந்திய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

இவ்வலுவலகத்தினை பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹெட்டியாராட்சி திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையினை குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் சூலானந்த பெரோரா திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் என்.திருஞானசம்பந்தர் உட்பட திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
By:-yasi

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.