வடபகுதியின் மனித உரிமைமீறல் குற்றச் சாட்டுக்கள் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

வடபகுதியின் மனித உரிமைமீறல் குற்றச் சாட்டுக்கள் குறித்து புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் புதிய விரிவான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு ஐந்து நீதவான்கள் அடங்கிய விசேட குழுவொன்றினால் பிரஸ்தாப விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நீதவான் குழாமில் மூன்று சிங்கள நீதவான்களும், தலா ஒரு தமிழ் மற்றும் முஸ்லிம் நீதவானும் உள்ளடங்குவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதவானுமான பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் பிரஸ்தாப ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. அதன்போது கிடைக்கப் பெறும் சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு சட்டங்களின் அடிப்படையில் நீதவான்கள் சுயாதீனமாக கடமையாற்றுவார்கள். வழக்கு விசாணைகளின் அடிப்படையில் நீதவான்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளானவர்களினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும். எவ்வாறெனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.