சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை

தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.

வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற, கலந்துரையாடலில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செய்யவில்லை என பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் சிவில் சமூகத்தினர் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று வவுனியா, றம்பைக்குளம் சென்.அன்ரனிஸ் தேவாலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் தலைமையில் இடம்பெற்றது.

இதில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை கொள்கையுடனேயே அரசாங்கத்துடன் கூட்டமைப்பினர் பேச வேண்டும். அத்துடன், கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன், அதாவது இக் கொள்கைக்கு ஆதரவான அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பேசி சரியானதொரு தீர்வை தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு பெற்றுத்தர வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள சிவில் சமுகம், அதற்காக தாம் பக்க பலமாக நின்று ஒத்துழைப்போம் எனவும் கூறியுள்ளது.

அதற்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் அரசுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் என்று சிவில் சமுகம் கோரியுள்ளது. நாங்கள் எந்த பதாதைகளையும் தூக்கிக்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவில்லை.

ஆனால் எம் தமிழ் மக்களுக்குத் தேவையான நீதியான, நியாயமான, சுதந்திரமான, பொருளாதார, சமூக, கலாசார, பண்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். இதற்கு ஏனைய கட்சிகளுடனும், சமூகத்தினருடனும் இணைந்து பேசிக் கலந்துரையாடத் தயாரகவும் உள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரியதொரு கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பின் கூற்றுகளின்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பான ஐயப்பாடுகள் தமிழ் சிவில் சமூகத்திற்கு தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.