தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படும்! அரசாங்கம்! அமெரிக்காவை திருப்திப்படுத்தும் நகர்வு

சிறையில் வைக்கப்பட்டிருக்கும் போரின் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது.

இதன்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

போரின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட வேண்டும் என தமிழ்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

அத்துடன் காணமற்போனவர்கள் தொடர்பிலும் தமிழ்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாக பி.டி.ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்களை நெருங்கிய உறவினர்கள் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென இலங்கையின் தீவிரவாத விசாரணைப் பிரிவு பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளது.

வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோர் தமது அடையாளங்களை நிரூபித்து, தடுப்பிலுள்ளோர் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கென உறவினர்கள் தாம் வதியும் பிரதேசத்தின் காவல்நிலைய பொறுப்பதிகாரியின் அல்லது கிராம அதிகாரியின் உறுதிப்படுத்தல் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தீவிரவாத விசாரணைப் பிரிவு, 2வது மாடி, புதிய செயலக கட்டடம், கொழும்பு-1ல் அல்லது வவுனியாவில், கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதி காவல்துறை மாஅதிபரின் பணியகத்துக்கு எதிரேயுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவில் அல்லது பூசாவில் ரேஸ்கோஸ் வீதியில் உள்ள தீவிரவாத விசாரணைப்பிரிவு பணியகத்தில் இந்த விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்காக வாசிங்டன் புறப்படவுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஹிலாரியை திருப்திப்படுத்தும் ஒரு நகர்வாகவே  இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடுப்பில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை 01-04-2012  முதல் அறிந்து கொள்ளலாம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதும், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றே வெளியிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.