Pages

Pages

வவு. மகிழங்குளம் பிரதேசத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு ஆனந்தன் எம்.பி கோரிக்கை

வவுனியா மகிழங்குளம் பிரதேசத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா ஓமந்தைக்கு அருகிலுள்ள மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறுமாதங்களாகியும் அவர்களுக்கான அத்தியாவசிய உட்கட்டுமானங்கள் மற்றும் மீள்குடியேற்ற வசதிகள் செய்யப்படாமலுள்ளதாக அப்பகுதி மக்கள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்களின் முறைப்பாடுகளை அடுத்தே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

1972ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தினால் மலையகத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் உயிர்பிழைப்பதற்காக வடக்கு, கிழக்கு பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

அவ்வாறு தஞ்சம் அடைந்த மக்களில் சுமார் 140 குடும்பத்தினர் மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவிலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரண்டு ஏக்கர் வீதம் காடுவெட்டி, துப்புரவு செய்து, பிழைப்புக்காக விவசாயம் செய்து, தமது ஜீவனோபாயத்தையும் கவனித்துக் கொண்டு வாழ்விடத்தையும் அங்கு அமைத்துக் கொண்டனர்.

இத்தகைய சூழலில் 1997ஆம் ஆண்டு ஜெயசிகுறு நடவடிக்கையின்போது, இவர்கள் மீண்டும் இங்கிருந்து இடம்பெயர்ந்து மடு, வவுனியா பூந்தோட்டம், நெளுக்குளம் போன்ற முகாம்களிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் மற்றும் வன்னியின் ஏனைய பகுதிகளிலும் இப்பகுதி மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த இம்மக்கள், கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மீண்டும் தத்தமது கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.

இவ்வாறு திரும்பியவர்களில் புதிய வேலர் சின்னக்குளத்தில் 100 குடும்பத்தினரும், விளக்குவைத்த குளம் பகுதியில் 40 குடும்பத்தினரும், மகிழங்குளம் கிராமத்தில் 33 குடும்பத்தினரும், பாக்குச்சொறிஞ்சான் கிராமத்தில் 6 குடும்பத்தினரும், இறம்பைக்குளம் பகுதியில் 5குடும்பத்தினரும் அடங்குவர்.

இவர்கள் தவிர இன்னமும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் மீள்குடியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர். இப்பிரதேசத்து மக்கள் தமது காணிகளில் விவசாயம் செய்து வந்ததுடன், பலன்தரும் மரங்களையும் வளர்த்து வந்தனர்.

மீள்குடியேறும் தருவாயில் இவர்களது காணிகள் பற்றைகளாகக் காட்சியளித்ததுடன் வீடுகள் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் இருந்தது. பின்னர் தமது உழைப்பில் தமது காணிகளை இங்குள்ள மக்கள் தாமே துப்புரவு செய்துகொண்டு வாழ்கின்றனர்.

மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்வதற்கான சாலைவசதிகள்கூட செய்துகொடுக்கப்படாமல் இருந்தது. பின்னர் பிரதான வீதி புனரமைக்கப்பட்டதுடன், இரண்டு குழாய்க் கிணறுகளும் அப்பகுதி மக்களுக்கு திருத்திக் கொடுக்கப்பட்டன.

இருப்பினும், காணிகளிலுள்ள கிணறுகள் துப்புரவு செய்யப்படாமலும் மலசலக்கூட வசதிகள் செய்துகொடுக்கப்படாமலும் கைவிடப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர்.

ஏற்கனவே வாழ்வாதாரத்திற்காகவும் ஜீவனோபாயத்திற்காகவும் மிகவும் சிரமப்படுகின்ற மேற்படி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமையினாலும் மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமையினாலும் சொல்லொனாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

எனவே மீள்குடியேற்ற அமைச்சும் மாவட்ட செயலகமும் இணைந்து இம்மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடன் செய்துகொடுக்க முன்வரவேண்டும்.

இந்நிலையில், மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவிற்கென்று ஒரு முன்பள்ளியையும், பொதுக்கிணறும் கட்டிக்கொடுக்க முன்வந்த தொண்டு நிறுவனமும் அரசின் அனுமதி கிடைக்காமல் திரும்பிச்சென்றுள்ளது.

ஏற்கனவே கந்தன்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அங்கும் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காமையால் பத்துவயதுப் பெண்பிள்ளை நீர் எடுப்பதற்காகக் கிணற்றுக்குச் சென்று கிணற்றில் மூழ்கி இறந்ததை மாவட்ட நிர்வாகம் மறந்திருக்காது என்று நினைக்கின்றேன்.

இவ்வாறான அவலநிலை தொடர்கதையாக மாறிவிடாமல் மற்றுமொரு கந்தன்குளம் உருவாகிவிடாமல், சம்பந்தபட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.